எதிர்க்கட்சி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் பிசுபிசுத்தது தமிழகம் முழுவதும் 95.88% பேருந்துகள் இயக்கம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லை

சென்னை: எதிர்க்கட்சி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்த வேலைநிறுத்த போராட்டம் பிசுபிசுத்தது. தமிழகம் முழுவதும் நேற்று 95.88 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. பழைய ஓய்வூதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கின. தொழிலாளர் நலத்துறை, தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்துக்கழக நிர்வாகங்களுடன் டிச.27, ஜன.3, ஜன.8 ஆகிய தினங்களில் 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது.

அதில் சுமுக உடன்பாடு எட்டப்படாததைத் தொடர்ந்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு பின் தொழிற்சங்கங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் வேலைநிறுத்தம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப், எச்எம்எஸ், எம்எல்எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் நிச்சயம் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். ஐஎன்டியுசி தொழிற்சங்கம் பொதுமக்கள் பாதிக்கப்படகூடாது என்பதற்காக அரசின் கோரிக்கையேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவித்தனர்.

அந்த வகையில் தொமுச, ஐஎன்டியுசி, எஐஎல்எப் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடாமல் பேருந்து இயக்கி வருகின்றனர். வேலை நிறுத்த போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்காது என கருதப்பட்ட நிலையில் நேற்று காலை முதல் அனைத்து பணிமணைகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 95.88% பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று மாலை 6 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் 17,713 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் அதில் 16,983 பேருந்துகள் இயக்கப்பட்டது.

சென்னையை பொருத்த வரை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 3,233 பேருந்துகள் இயக்கப்படும், நிலையில் நேற்று 3,072 பேருந்துகள் அதாவது 95.02% பேருந்துகள் இயக்கப்பட்டது. மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் நேற்று அனைத்து பணிமனைகளில் இருந்து அனைத்து வழித்தடங்களில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டது. மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், அதிகாலையிலே அனைத்து பணிமனைகளுக்கும் சென்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். சென்னை மத்திய பணிமனையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டது.

வடபழனி, திருவான்மியூர், பெசன்ட் நகர், பிராட்வே கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளும் வழக்கம் போல் இயக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் 80% பேருந்துகள் இயக்கப்பட்டது. ஆவடி பேருந்து பணிமனையில் இருந்து தினந்தோறும் 152 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று 150 பேருந்துகள் இயக்கப்பட்டது. பொன்னேரி பணிமனையிலிருந்து அனைத்து பேருந்துகளும் இயங்கின. பொதட்டூர்பேட்டை பனிமணியில் இருந்து 80% பேருந்துகள் இயக்கப்பட்டது. பூந்தமல்லி, ஐயப்பன்தாங்கல் பணிமனையில் இருந்து வழக்கம் போல் பேருந்துகள் இயங்கின. செங்குன்றம் பேருந்து நிலையத்திலிருந்து வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்பட்டது.

ஊத்துக்கோட்டை பணிமனையில் இருந்து 90% பஸ்கள் இயக்கப்பட்டது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டது. மதுராந்தகம் பணிமலையில் இருந்து இயக்கப்படக்கூடிய பஸ்களில் 80 சதவீதம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தாம்பரம், குரோம்பேட்டை பணிமனைகளில் இருந்து அனைத்து பேருந்துகளும் வழக்கம் போல இயங்கியது. காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் உள்ள பணிமனை, ஓரிக்கை பணிமனைகள் என மூன்று பணிமனைகளில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்பட்டன. உத்திரமேரூர் பணிமனையில் இருந்து அனைத்து பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்பட்டன.

பேருந்துகள் இயக்கம் தொடர்பாக அனைத்து போக்குவரத்து கழக அதிகாரிகளை தொடர் கண்காணிப்பில் இருக்க அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அமைச்சர் நேற்று கோயம்பேடு பேருந்து நிலையம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு பேருந்துகளின் இயக்கம் குறித்து கேட்டறிந்தார். போக்குவரத்து கழக பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தாலும் மக்களுக்கு சிரமமின்றி பேருந்து, சேவைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுத்தது. பெரும்பாலன இடங்களில் மக்கள் சிரமின்றி பேருந்துகளில் பயணித்தனர்.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?