எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் பயம் மக்களவை தேர்தலை முன்கூட்டியே நடத்த பாஜ திட்டம்:நிதிஷ் குமார்

நாளந்தா: எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் பாஜ அச்சம் அடைந்துள்ளதால் மக்களவை தேர்தலை முன்கூட்டியே நடத்த வாய்ப்புள்ளதாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜவை வீழ்த்தும் ஒரேநோக்கத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஈடுபட்டு வருகிறார். அதன்படி 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணியின் 3வது கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் மும்பையில் நடைபெற உள்ளது.

இதனிடையே கொல்கத்தாவில் இளைஞர் அணி மாநாட்டில் பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அடுத்த ஆண்டு மே மாதம் தான் மக்களவை தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் இந்த ஆண்டு டிசம்பர், அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியிலேயே மக்களவை தேர்தலை நடத்த பாஜ திட்டமிட்டு வருவதாக தெரிவித்திருந்தார். மம்தாவின் பேச்சை ஆதரிக்கும் வகையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் அதே கருத்தை தெரிவித்துள்ளார். நாளந்தா திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் புதிய வளாகத்தை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார் கூறியதாவது: எனக்கு பதவி மீது ஆசையோ, அரசியலில் லட்சியங்களோ எதுவும் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி மக்களவை தேர்தலை முன்கூட்டியே நடத்தும் என நான் 7,8 மாதங்களாகவே கூறி வருகிறேன். இப்போது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை கண்டு பாஜ மிகவும் அச்சமடைந்துள்ளது. இதனால் நாடாளுமன்ற தேர்தலை மே மாதம் நடத்தினால் அதிக நஷ்டம் ஏற்படும் என்பதால் இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2024 ஜனவரியில் தேர்தலை நடத்த வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

அதானி குழுமம் மீது ஊழல் புகார் கூறிய ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு செபி நோட்டீஸ்

வினாத்தாள் கசிவு: ம.பி.யில் 10 ஆண்டு சிறை

கென்யாவில் அரசுக்கு எதிராக போராட்டம்: 39 பேர் பலி