வாய்ப்புகளைப் பயன்படுத்தி,வெற்றியை வசப்படுத்துங்கள்!

வாழ்க்கையில் வெற்றி பெற இதுவே தருணம்.வாய்ப்புகளை பயன்படுத்துவதில் இருந்தே உங்கள் வெற்றிப் பயணத்தை ஆரம்பியுங்கள். ஒவ்வொரு முறையும் முயன்றால் தான் முடியும் என்ற எண்ணத்தை மனதில் விதைத்துக் கொள்ளுங்கள்.விதைக்காமல் விளைச்சல் இல்லை. உழைக்காமல் உயர்வு இல்லை. மன அமைதி எண்ணத்திற்கு ஏற்றாற் போல அமையும் என்பர். எதிர்பாராமல் ஏற்படும் ஏமாற்றத்தை நம்பிக்கையோடு தாங்கி கொள்ளத்தான் வேண்டும். நேரமே முன்னேற்றத்தின் சாவி. மற்றவர்களை குற்றம் சாட்டுவதற்கு பயன்படும் நேரத்தை வளர்ச்சிக்காக பயன்படுத்துவது தான் நேரத்திற்கு நாம் தரும் மரியாதை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.ஒரு போரில் போர்வீரன் ஒருவன் தன் ஆயுதங்களை இழந்து நிராயுதபாணியாக நின்றால் கூட தன்னுடைய இரு கைகளை போர்வாளாக கொண்டு தன் உயிர்பிரியும் கடைசிநேரம் வரை துணிவோடு போரிடுவான். எந்த தருணத்திலும் வாய்ப்புகள் கிட்டும். அதை பயன்படுத்தி வெற்றி வாகைப்பூ சூடிக்கொள்ளுங்கள். எல்லோருக்கும் அரசுப் பணியை அடைய வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. ஆனால் ஒரு சிலர் மட்டுமே போட்டித் தேர்வு வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வெற்றி பெறுகிறார்கள்.

யூனியன் பப்ளிக் சர்வீசஸ் கமிஷன் எனப்படும் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற, பல ஆண்டுகள் கடுமையாக முயற்சிக்க வேண்டியுள்ளது. சிலருக்கு சிறுவயதில் இருந்தே கலெக்டர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தாலும், அதனை மெய்ப்பிக்கக்கூடிய யுபிஎஸ்சி தேர்வில் வெல்ல குறைந்தது ஓராண்டாவது கடினமாக உழைக்க வேண்டும்.ஆனால், விதிவிலக்காக ஒரு சிலர் குறைந்த மாதங்கள் மட்டுமே படித்து, முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுவிடுவது உண்டு.அப்படி யுபிஎஸ்சி தேர்வை தனக்குக் கிடைத்த வாய்ப்பாக மாற்றிக் கொண்டு வெற்றி பெற்ற சாதனை பெண் ஒருவரின் கதைதான் இது.டெல்லியைச் சேர்ந்தவர் செளமியா. பள்ளிப் படிப்பை முடித்த பிறகு கல்லூரிப் படிப்பில் சட்டப் படிப்பை தேர்ந்தெடுத்து படித்தார். பிறகு வழக்கறிஞராக பயிற்சி பெற்று வரும்போதே கலெக்டர் ஆக வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அதனால் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இதற்காக அவர் எந்த கோச்சிங் சென்டருக்கும் செல்லாமல் சுயமாக படித்து வந்துள்ளார். செளமியாவின் கடின உழைப்பிற்கு பலனாக வெறும் 4 மாத முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இதில் மற்றொரு உண்மையான ஊக்க மளிக்கும் விஷயம் என்னவென்றால், செளமியா ஷர்மா 16 வயதிலேயே கேட்கும் திறனை இழந்தவர். இவருக்கு சிறு வயதில் இருந்தே ஐஏஎஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்ற கனவு இருந்து வந்துள்ளது. இருப்பினும் அதற்கு முன்னதாக சட்ட திட்டங்கள் குறித்து நன்றாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் சட்டப்படிப்பை தேர்ந்தெடுத்துப் படித்துள்ளார்.தேசிய சட்டப்பள்ளியில் படித்து பட்டம் பெற்றுள்ளார். அதன் பின்னர் 2017ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் பங்கேற்க முடிவெடுத்த செளமியா சர்மா, அதற்காக கடுமையாக முயன்று தனது கனவை நனவாக்கியுள்ளார்.சௌமியா தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். சோஷியல் மீடியாவில் படுசுறுசுறுப்பாக இயங்கிவரும் செளமியா சர்மாவை இன்ஸ்டாகிராமில் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பின்தொடருகின்றனர்.

முதல்நிலைத் தேர்வு தேர்ச்சி பெற்ற பிறகு, மெயின் எக்ஸாம், நேர்முகத் தேர்வு! நான் இந்தத் தேர்வுக்குத் தயாராகத் தொடங்கியதிலிருந்தே டிவி, சமூக வலைத்தளங்கள், வாட்ஸ் அப் ஆகிய அனைத்துக் கேளிக்கைகளிலிருந்தும் விலகிவிட்டேன். என் வீட்டில் உள்ளவர்களும் எனக்காக இவற்றையெல்லாம் பயன்படுத்துவதை குறைத்துக்கொண்டு மிகப்பெரிய பலமாக இருந்தனர். ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி, மெயின் எக்ஸாம் நடக்கவிருந்த வாரம், என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. அப்போது நான் வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தேன். 102 டிகிரிக்குக் கீழ் என்னுடைய உடல் தட்பவெப்பம் குறையவே இல்லை. சில சமயங்களில், 103 டிகிரியைக்கூட தொடும். அப்போது நாளொன்றுக்கு மூன்று முறைகூட ‘டிரிப்ஸ்’ ஏற்றியிருக்கிறார்கள் என் மருத்துவர்கள். தேர்வு எழுதும் சமயத்தில்கூட, உணவு இடைவேளையின்போது, டிரிப்ஸ் ஏற்றிக்கொண்டு தேர்வு எழுதுவதற்கு முன்பு சாக்லேட் சாப்பிட்டு என்னை ஓரளவுக்குத் தேற்றிக்கொண்டே தேர்வு எழுதி முடித்தேன் என்று விவரிக்கும் சௌமியா, 16 வயதில் செவித்திறனை முற்றிலுமாக இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு 16 வயதிருக்கும். அப்போது, என் செவித்திறனை நான் முற்றிலுமாக இழந்தேன். அதற்கான சரியான காரணம் என்னவென்று இன்றுவரை கண்டு பிடிக்க முடியவில்லை. என்னுடைய திறன்களில் ஒன்றை நான் இழந்துவிட்டேன் என்கிற கசப்பான உண்மையைச் சில வருடங்கள்வரை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதன்பிறகு, மெள்ள மெள்ள அந்த உண்மையை நான் ஏற்றுக்கொண்டேன்.அதன்பிறகு, கேட்கும் திறன் கருவியை நான் பொருத்திக்கொண்டேன் என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் செளமியா.ஆனால், செளமியா தன்னை மாற்றுத் திறனாளியாகக் கருதாமல், இந்தத் சமுதாயத்தில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்று நினைக்கும் திறமைசாலியாகவே தன்னை எப்போதும் உணர்ந்தார் என்பதற்கு, கடந்த 2016 ம் ஆண்டு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் இவர் அளித்த மனு ஓர் உதாரணம். டெல்லி நீதித்துறைப் பணிகளில் இணைவதற்கான தேர்வுகளில் ( Delhi juidicial services), மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகள், பார்வையற்றவர்களுக்கும், கை,கால்களில் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு மட்டுமே இருந்தன.இதனை, செவித்திறன் குன்றியவர்களுக்கும் தரவேண்டும் என்று கோரி, ஏப்ரல் மாதம் 2016ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார் சௌமியா ஷர்மா. இந்த மனுவை ஏற்று, கடந்த டிசம்பர் 2017 ம் ஆண்டு, செவித்திறன் குன்றியவர்களுக்கும் அந்தத் சலுகைகள் அளிக்கப்படும் என்று தெரிவித்தது டெல்லி உயர் நீதிமன்றம். இதன் மூலம் செவித்திறன் குன்றியவர்களுக்கும் வாய்ப்புகளும், சலுகைகளும் ஏற்படுத்தித் தந்து அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றார் சௌமியா.

தற்போது சிவில் சர்வீஸ் தேர்வில் மிகப்பெரிய வெற்றி கண்டிருக்கும் செளமியா ஷர்மா, மேலும், இதுபோன்ற பயனுள்ள மாற்றங்களை என்னுடைய பணியில் கொண்டு வருவேன் என்று தெரிவித்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.பல சிரமங்கள் மற்றும் தடைகள் இருந்தாலும், வாய்ப்புகளை பயன்படுத்தி கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியுடன் செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு ஐஏஎஸ் அதிகாரி சௌமியா சர்மாவின் வாழ்க்கை மிகச் சிறந்த முன்னுதாரணம்.

Related posts

ஆந்திராவில் ஆட்சி மாற்றம் எதிரொலி; சுரங்கத்துறை முக்கிய ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க் தீ வைத்து எரிப்பு: கார் டிரைவர்கள் சிக்கினர்

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு வலை

கடன் வழங்கும் திட்டத்தில் மானியத் தொகையை விடுவிக்க லஞ்சம் வாங்கிய தொழில் மைய அலுவலக உதவியாளர் கைது: 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி