சொந்தக் கட்டிடங்களில் இயங்கும்; கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் புனரமைத்தல் பணிக்கு நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம்: மானிய தொகையையும் உயர்த்தியது தமிழக அரசு

சென்னை: சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதியுதவி கோருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-2017ம் ஆண்டு முதல் நிதியுதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் பணிகளை மேற்கொள்ளவும், கட்டடத்தின் வயதிற்கேற்ப மானியத் தொகையினை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது. கூடுதலாக மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள பணிகளில், சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டாண்ட், மைக் செட் (ம) ஒலிப்பெருக்கி, நற்கருணை பேழைப் பீடம், திருப்பலிக்கு தேவையான கதிர் பாத்திரங்கள், சுரூபங்கள், மெழுகுவர்த்தி ஸ்டான்ட்கள் (ம) பக்தர்கள் அமர்ந்து முழங்காலிட்டு இருக்க தேவையான பெஞ்சுகள் போன்ற ஆலயங்களுக்கு தேவையான உபகரணங்கள், தேவாலயத்திற்கு சுற்றுச்சுவர் வசதி அமைத்தல் போன்ற பணிகள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 10 முதல் 15 வருடம் வரை உள்ள தேவாலயம் கட்டிடத்திற்கான மானியம் 2 லட்சத்தில் இருந்து 10 லட்சமாகவும், 15 முதல் 20 வருடம் வரை கட்டிடத்திற்கான மானியம் 4 லட்சத்தில் இருந்து 15 லட்சமாகவும், 20 வருடத்திற்கு மேல் இருப்பின் 6 லட்சம் மானியத்தில் இருந்து 20 லட்சமாகவும் மானியம் உயர்த்தப்பட்டுள்ளது. நிதியுதவி கோரி பெறப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழு மூலம் பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பிக்கும் கிறித்துவ தேவாலயங்கள் ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து, உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு நிதியுதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதியுதவி இரு தவணைகளாக மாவட்ட ஆட்சித்தலைவரின் ஒப்புதலுடன் தேவாலயத்தின் வங்கிக்கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். மேலும், தகவலுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என்று சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

 

Related posts

ஜம்மு அருகே மலைப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து: ஓடும் பேருந்தில் இருந்து குதித்ததால் 10 பயணிகள் காயம்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நாளை பிரதமருடன் சந்திப்பு..!!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு தள்ளுபடி!!