கொரோனா காலத்தில் சேதமடைந்திருந்த பிறவி குறைபாடு குழந்தைகளுக்கான தெராபெட்டிக் பூங்கா திறப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மத்திய, மாநில அரசுகள் இணைந்து, குழந்தைகள் பிறவி குறைபாடுகளை கண்டறிந்து, சிகிச்சை அளிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 3 மருத்துவர்கள், 9 மருத்துவ ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள, 14 ஒன்றியங்களிலும், மருத்துவ குழுவினர் நேரடியாக சென்று, பிறவி குறைபாடு குழந்தைகளை கண்டறிந்து, திருவள்ளூர் அரசு மருத்துவனையில் உள்ள இப்பிரிவுக்கு பரிந்துரை செய்கின்றனர்.

இம்மையத்தில், பிறந்த குழந்தை முதல் 18 வயது உடைய குழந்தைகளுக்கு, அவர்களது குறைபாடுக்கு ஏற்ப உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வரும் குழந்தைகளுக்கு, ஆறு விதமான சிகிச்சை அளிக்கும் வகையில், ‘தெராபெட்டிக் பூங்கா’ ரூ.16 லட்சம் மதிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இந்நிலையில், ‘கொரோனா’ காரணமாக, இந்த பூங்கா பயன்படுத்தப்படாததால், சேதமடைந்து வந்தது. தற்போது, திருவள்ளூர் ‘பெடரல்’ வங்கி கிளை சார்பில், ரூ.7.75 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் ரேவதி தலைமை தாங்கி திறந்து வைத்தார். துணை முதல்வர் திலகவதி அனைவரையும் வரவேற்றார். பெடரல் வங்கி மண்டல மேலாளர் ராஜா சீனிவாசன், திருவள்ளூர் கிளை மேலாளர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில், மருத்துவர்கள் அன்பழகன், ராஜ்குமார், விஜயராஜ், ஜெகதீஷ்குமார், ஸ்ரீதேவி, பிரபுசங்கர், பூங்கோதை கலந்து கொண்டனர். இந்த பூங்காவில், புலன்களை ஒருங்கிணைத்தல், தொடு உணர்வு, உடல் சமநிலை சிகிச்சை, பெருந்தசை வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட ஆறு வகையான சிகிச்சை அளிக்கும் கருவிகள் உள்ளன.

Related posts

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு 102 டிகிரி வெயில்

தோகா விமானங்கள் தாமதம் சென்னை விமான நிலையத்தில் 320 பயணிகள் கடும் அவதி

தடை செய்யப்பட்ட பகுதியில் விநாயகர் சிலையை எடுத்து செல்ல முயன்ற 61 பேர் கைது