இன்று இரவு கோலாகல தொடக்க விழா; ஒலிம்பிக் பதக்க வேட்டை நாளை ஆரம்பம்.! விழாக்கோலம் பூண்டது பாரிஸ்

பாரிஸ்: உலகின் அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைக்கும், விளையாட்டு உலகின் உச்சபட்ச நிகழ்ச்சியாக ஒலிம்பிக் திகழ்கிறது. கடந்த 1896ம் ஆண்டு நவீன ஒலிம்பிக் அறிமுகமானது. அதிலிருந்து ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. அதன்படி ஒட்டுமொத்த விளையாட்டு பிரியர்களும் பெரிதும் எதிர்பார்த்த 33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று aகோலாகலமாக தொடங்குகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். மொத்தம் 32 விளையாட்டுகளில் 329 பந்தயங்கள் நடக்கின்றன. வரும் 11ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளது. 1900 மற்றும் 1924ம் ஆண்டுக்கு பின் இப்போட்டி பிரான்ஸ் நடத்துகிறது. 18 நாட்களில் 32 விளையாட்டுகளில் 329 போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

பாரிஸ் நகரம் மட்டுமல்லாது பிரான்சின் பிற 16 நகரங்களிலும் போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா, இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் வீரர்களின் அணிவகுப்பு, மைதானத்தில் அல்லாமல் முதன்முறையாக நதியில் நடத்தப்படுகிறது. பாரிஸில் உள்ள புகழ்பெற்ற செய்ன் நதியின் பாண்ட் டி ஆஸ்டர்லிட்ஸ் பாலத்தில் தொடங்கி 6 கிலோ மீட்டர் தூரம் சென்று ஈபிள்கோபுரம் அருகே அணிவகுப்பு நிறைவடைய உள்ளது. 94 படகுகளில் 10,500 வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவும் தேசிய கொடியை ஏந்தி இந்திய குழுவை வழிநடத்தி செல்கின்றனர்.

3000 பேர் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகள் 4 மணி நேரம் நடைபெற உள்ளன. சுமார் 3.26 லட்சம் பார்வையாளர்கள் ஆற்றின் கரைகள் மற்றும் பாலங்களில் அடுக்கப்பட்ட இருக்கைகளில் இருந்து நிகழ்ச்சியைப் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதையில் உள்ள 80 பெரிய திரைகளிலும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளது. போட்டியை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தொடங்கி வைக்கிறார். தொடர் ஓட்டமாக எடுத்துவரப்படும் தீபம் மெகா கொப்பரையில் ஏற்றப்பட்டதும் ஒலிம்பிக் கொண்டாட்டம் தொடங்கிவிடும். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஜெர்மன் பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், நீதா அம்பானி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தொடக்க விழாவில் கலந்து கொள்கின்றனர்.

விழாவையொட்டி 45,000 போலீசார் 20,000 தனியார் பாதுகாப்பு முகவர்கள், 18,000 ராணுவ வீரர்கள் நகரைச் சுற்றி ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தொடக்க விழாவை தொடர்ந்து நாளை முதல் பதக்க வேட்டை போட்டிகள் தொடங்குகிறது. போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி நண்பகல் 12 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெறுகிறது. பாரிஸ் ஒலிம்பிக்ஸின் முதல் பதக்கம் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில், ஏர் ரைபிள் கலப்பு அணி விளையாட்டிற்காக வழங்கப்படுகிறது. நாளை மாலை 3 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா பதக்கம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு பதக்கத்துடன் சுமார் 42 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.

Related posts

திறந்தவெளி அரங்கு உட்பட மதுரை கலைஞர் நூலகத்தில் ரூ12.80 கோடியில் கூடுதல் வசதி: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

அணையில் மூழ்கி இன்ஜினியர் பலி

போதையில் படுத்திருந்த திருடன் கார் ஏறியதில் தலை நசுங்கி பலி