ஊட்டியில் ஒரே நேரத்தில் வேட்புமனுதாக்கல் செய்ய குவிந்தனர் பாஜ – அதிமுகவினர் மோதல், தடியடி: வேட்பாளர் எல்.முருகன், அண்ணாமலையால் பிரச்னை; இரு கட்சியினரும் மறியல்; 2 மணி நேரம் தவித்த மக்கள்

ஊட்டி: ஊட்டியில் வேட்பு மனு தாக்கல் செய்ய அண்ணாமலை, எல்.முருகன் தாமதமாக வந்ததால், ஒரே நேரத்தில் அதிமுகவினரும், பாஜவினரும் மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக புறப்பட முயன்றனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதை கண்டித்து இரு கட்சிகளும் மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் பொதுமக்கள் தவித்தனர். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்.19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று அதிமுக மற்றும் பாஜ ஆகிய இரு கட்சிகளும் வேட்புமனு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்திருந்தன. இரு கட்சியினரும் ஊட்டி காபி அவுஸ் சதுக்கம் பகுதியில் இருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்துக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். காலை 11 மணிக்கு ஊர்வலமாக செல்ல பாஜவுக்கு போலீசார் அனுமதி வழங்கியிருந்தனர். இதனால், பாஜ தொண்டர்கள் காபி அவுஸ் பகுதியில் கூடியிருந்தனர். ஆனால், பாஜ வேட்பாளர் எல்.முருகன் மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் குறித்த நேரத்திற்கு வராத நிலையில், பாஜ ஊர்வலம் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. பகல் 12 பணி ஆகியும் ஊர்வலம் புறப்படவில்லை. அதற்குள் காபி அவுஸ் பகுதியல் அதிமுகவினர் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் குவிந்தனர்.

இதனால் அதிமுகவினர் தங்களை அனுமதிக்கோரி போலீசார்ருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு கட்சியினரும் ஒரே இடத்தில் கூடியது மட்டுமின்றி, ஒருவருக்கு ஒருவர் எதிர் கோஷங்கள் எழுப்பினர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் அங்கு வந்தனர். இதையடுத்து, பாஜவினர் பேரணியாக கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றனர். அவர்கள் சென்ற ஒரு சில நிமிடங்களிலேயே அதிமுகவினரும் ஊர்வலமாக செல்லத் துவங்கினர். இரு தரப்பினரும் கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள டிபிஓ சந்திப்பு பகுதிக்கு சென்றவுடன் அங்கிருந்து வேட்பாளர்கள் மற்றும் அவருடன் 4 பேரை மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர். மற்ற அனைவரும் டிபிஓ சந்திப்பு பகுதியில் கூடியிருந்தனர்.

அங்கும் இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் எதிர்கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனை தடுக்க போலீசார் இரு தரப்பினரையும் கலைந்துச் செல்லும்படி கூறினர். ஆனால் இரு தரப்பினரும் கலைந்து செல்லாததால், லேசான தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, ஒரு சிலர் ஓடியபோது தவறி கால்வாயில் விழுந்து காயம் ஏற்பட்டது. அவர்களை ஊட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து பாஜவினர் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலும், அதிமுகவினர் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் கலெக்டர் அலுவலகம் வழியாக செல்லும் மைசூர் மற்றும் கூடலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த நீலகிரி எஸ்பி சுந்தரவடிவேல் இரு தரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், சுமூக முடிவு எட்டியதால், இரு தரப்பினரும் கலைந்துச் சென்றனர். இந்த போராட்டத்தால், சுமார் 2 மணி நேரம் இவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

* பவுர்ணமிதான் காரணம்
நேற்று முன்தினம் துவங்கி நேற்று பிற்பகல் 1 மணியுடன் பவுர்ணமி முடிந்தது. 1 மணிக்கு பின் தேய்பிறை தொடங்கியது. இதனால் எப்படியாவது 1 மணிக்குள் வேட்புமனுதாக்கல் செய்து விடலாம் என்று நினைத்து, பாஜவினர் மற்றும் அதிமுகவினர் போட்டிப்போட்டுக் கொண்டு கலெக்டர் அலுவலகம் வந்தனர். இதில், பாஜவினர் முந்திக்கொண்டு 1 மணிக்குள் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டனர். ஆனால், அதிமுகவால் 1 மணிக்குள் வேட்புமனுதாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த அதிமுகவினர் கலெக்டர் அலுவலகத்தில் கூச்சலிட்டு பார்த்தனர். ஆனால், கடைசி வரை அவர்களால் 1 மணிக்குள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு