ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை செப்.30 வரை நீட்டிப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ- பாஸ் வழங்கும் நடைமுறையை வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனங்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் வரை ஊட்டி, கொடைக்கானலில் மே 7ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் முறையை அமல்படுத்த வேண்டும் என்று நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த இ-பாஸ் வழங்குவதற்கு முன்பு வாகனங்களில் வருவோரிடம், என்ன மாதிரியான வாகனம், எத்தனை பேர் வருகின்றனர், ஒரு நாள் சுற்றுலாவா அல்லது தொடர்ந்து தங்குவார்களா என்பன உள்ளிட்ட விவரங்களைப் பெற வேண்டும் என்றும் இரு மாவட்ட கலெக்டர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது குறித்து நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள் தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

அப்போது, தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன. இ-பாஸ் முறையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கலாம் என்று தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறையை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர்.

Related posts

3 புதிய சட்டங்கள் குறித்து நீதி மற்றும் காவல் துறையினருக்கு விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை வேர்களைத் தேடி பயணத்திட்டம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

‘பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முதல்வரையும் சேர்க்க வேண்டும்’: – செல்வப்பெருந்தகை