ஊட்டி – கூடலூர் சாலையில் வலம் வரும் குதிரை கூட்டத்தால் விபத்து அபாயம்

*நடவடிக்கை எடுக்க சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தல்

ஊட்டி : ஊட்டி – கூடலூர் சாலையில் தலைகுந்தா பகுதியில் குதிரைகள் கூட்டம் கூட்டமாக வலம் வருவதால் வாகன ஓட்டுநர்கள் அவதியடைந்துள்ளனர்.
சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கூடலூர் வழித்தடத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால், இவ்வழித்தடத்தில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும். இந்நிலையில், இவ்வழித்தடத்தில் எச்பிஎப் முதல் பைன் பாரஸ்ட் பகுதி வரை நாள் தோறும் 25க்கும் மேற்பட்ட குதிரை கூட்டம் ஒன்று சாலையிலேயே உலாவி வருகிறது.

இவைகள் சாலையில் எந்நேரமும் நின்று கொண்டிருப்பதாலும், சண்டையிடுவதாலும் அவ்வழித்தடத்தில் வரும் வாகனங்கள் மீது மோதுவதாலும் விபத்து ஏற்பட்டு வருகிறது. சில சமயங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது இந்த குதிரைகள் மோதுவதால், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தவறி விழுந்து விபத்தும் ஏற்படுகிறது.
எனவே, ஊட்டி – கூடலூர் சாலையில் எச்பிஎப் முதல் பைன் பாரஸ்ட் வரை கூட்டம் கூட்டமாக வலம் வரும் குதிரை கூட்டத்தினை அப்புறப்படுத்த ஊட்டி நகராட்சி மற்றும் உல்லத்தி ஊராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

சிறார்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தண்டனை அதிகரிப்பு: அமித் ஷா

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூலை 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு

டாக்டர் காந்திமதிநாதனை இன்று இல்லத்திற்கே அழைத்து நேரில் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்