ஊட்டி எமரால்டில் புதிதாக கட்டிய அரசு மருத்துவமனை வளாகத்தில் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த ரூ.8.60 கோடி ஒதுக்கீடு: அனைத்து பணிகளும் முடித்து விரைவில் திறக்க ஏற்பாடு

ஊட்டி: ஊட்டி எமரால்டு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வட்டம் சாரா மருத்துவமனை வளாகத்தை சுற்றிலும் சுற்றுசுவர், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், காத்திருப்பு அறை கட்ட ரூ.8.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் முடித்து விரைவில் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எமரால்டு கிராமம் அமைந்துள்ளது. இங்கு நீர் மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள எமரால்டு அணை உள்ளது. இதன் சுற்று வட்டாரத்தில் எமரால்டு வேலி, காட்டுக்குப்பை, அண்ணாநகர், இந்திராநகர், பழைய அட்டுபாயில், கோத்தகண்டி, நேருநகர், லாரன்ஸ், குட்டிமணி நகர் 35க்கும் மேற்பட்ட கிராம பகுதிகள் உள்ளன. இங்கு வசிக்க கூடிய மக்கள் பெரும்பாலானோர் காய்கறி தோட்டங்களுக்கும், கூலி வேலைகளுக்கும் சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இக்கிராம மக்கள் தங்களின் அவசர மருத்துவ தேவைகளுக்கு சிகிச்சை பெற சுமார் 30 கி.மீ., தொலைவில் உள்ள ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை அல்லது மஞ்சூர் அரசு மருத்துவமனைக்கோ சென்று வர வேண்டிய சூழல் உள்ளது. அருகாமையில் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனை இல்லாததால் முதியோர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினும் பாதிப்படைந்து வந்தனர். எமரால்டு சுற்று வட்டார கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு எமரால்டு பகுதியில் படுக்கை உள்ளிட்ட அனைத்து நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை தொடர்ந்து வட்டம் சாரா மருத்துவமனை கட்ட எமரால்டு காவல் நிலையத்திற்கு பின்புறம் சுமார் 3 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, ரூ.18.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு இப்பகுதியில் மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்காக நிலம் சமன் செய்யப்பட்டு கட்டுமான பணிகள் துவங்கியது. கொரோனா காலகட்டத்தில் கட்டுமான பணிகள் தாமதமடைந்த நிலையில், அதன்பின் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டன. தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இருந்த போதும் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்படாத நிலை இருந்து வந்தது. இதனால் இம்மருத்துவமனைக்கு மருத்துவ பணியாளர்களை நியமித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த சூழலில் மருத்துவமனையை சுற்றிலும் சுற்று சுவர் இல்லாததது, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் போன்றவைகள் இல்லாமல் இருந்த நிலையில் அவற்றை சீரமைக்க நிதி கோரி அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து சுற்றுசுவர், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பொதுமக்கள் காத்திருப்பு அறை, ஆம்புலென்ஸ் நிறுத்துமிடம் ஆகியவை ஏற்படுத்த ரூ.8.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிகள் மேற்கொள்ள பொதுப்பணித்துறை மூலம் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ள நிலையில் பணிகள் அனைத்தையும் முடித்து 50 படுக்கைகள் கொண்ட எமரால்டு அரசு மருத்துவமனை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுதவிர கேத்தி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் வட்டார அளவிலான சுகாதார மைய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. மஞ்சூர் அரசு மருத்துவமனையில் ரூ.19 லட்சம் மதிப்பில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ஊட்டி நகராட்சியில் அமைந்துள்ள பிளேக் நோய் கட்டுபடுத்தும் கட்டிட பிரிவில் ரூ.19 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. கூக்கல்தொரை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் மேம்படுத்தும் பணி ரூ.20 லட்சம் செலவில் என மொத்தம் ரூ.1.38 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. கோத்தகிரி அரசு மருத்துவமனையில் ரூ.3.20 கோடி மதிப்பில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிாிவு கட்டப்பட்டு வருகிறது. கட்டபெட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.7.25 லட்சம் மதிப்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம்: வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு