ஊட்டி சுற்று வட்டாரத்தில் ஸ்ட்ராபெர்ரி பழச்செடிகள் பராமரிப்பு பணி

ஊட்டி : ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ள ஸ்ட்ராபெர்ரி பழ செடிகளை பராமரிக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.நீலகிரி மக்களின் முக்கிய தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பசுந்தேயிலைக்கு உரிய கொள்முதல் விலை இல்லை. இதனால் பெரும்பாலான விவசாயிகள் மாற்று விவசாயமாக தங்களுக்கு சொந்தமான நிலங்களில் கார்னேசன் எனப்படும் கொய்மலர் சாகுபடி, காளான் சாகுபடி, ஸ்ட்ரா பெர்ரிச்பழ சாகுபடி, மலைக்காய்கறிகள் சாகுபடி மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த சைனீஸ் காய்கறிகளை பயிரிட்டு கணிசமான லாபம் ஈட்டி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஸ்ட்ராபெரி பழ சாகுபடி செய்யப்படுகிறது. ஸ்ட்ராபெரி சாகுபடிக்கு, லேசான மழை மற்றும் குளிர் ஏற்றதாக இருப்பதால், தற்போது விவசாயிகள் அதிகளவில் ஸ்டிராபெரி பயிரிடுகின்றனர். இந்நிலையில் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த அக்டோபர் மாத துவக்கத்தில் இருந்து ஸ்ட்ராபெரி பழ நாற்றுகளை விவசாயிகள் பயிரிட்டனர்.

அவ்வப்போது பெய்த மழை காரணமாக இப்பயிர்கள் நன்கு வளர்ந்துள்ள சூழலில் காய்க்கத் துவங்கி உள்ளன. இதனால் இவற்றை பராமரிக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘ஸ்டிராபெரி பழத்துக்கு, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில், கிராக்கி உள்ளது. இதுதவிர ஊட்டி வர கூடிய சுற்றுலா பயணிகளும் வாங்கி செல்கின்றனர். தற்போது ஒரு கிலோ ஸ்ட்ராபெரிக்கு 200 முதல் 400 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. அக்டோபர் நடவு செய்யப்பட்ட ஸ்ட்ராபெர்ரி செடிகள் தற்போது காய்க்க துவங்கி உள்ளன’’ என்றனர்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு