ஊத்துக்கோட்டை அருகே பட்டா பெற்றவர்களுக்கு இடம் அளந்து ஒப்படைப்பு: வருவாய்த்துறை நடவடிக்கை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட 43 பேருக்கு நேற்று வருவாய்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் இடங்களை அளவீடு செய்து ஒப்படைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. ஊத்துக்கோட்டை அருகே லட்சிவாக்கம் ஊராட்சி காலனி பகுதியில் 180க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2008ம் ஆண்டு முதல் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி போராடி வருகின்றனர். இதற்காக பலமுறை திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திலும், ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்திலும் ஏராளமான மனுக்கள் அளித்துள்ளனர். பின்னர், கடந்த அக்டோபர் 2ம் தேதி, காந்தி ஜெயந்தியன்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்திலும் லட்சிவாக்கம் கிராம மக்கள் மனு அளித்தும், அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தி வந்துள்ளனர்.

இதை கண்டித்து, கடந்த நவம்பர் மாதம் லட்சிவாக்கம், செங்காளம்மன் கோயில் அருகே இப்பகுதி மக்கள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களிடம் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம், லட்சிவாக்கம் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தை அளவீடு செய்து, தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என அதிகாரிகள் உறுதி கூறியும், சுமார் ஒரு மாதத்துக்கு மேலாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மீண்டும் செங்காளம்மன் கோயில் அருகே பட்டா கொடுக்கும்வரை தொடர் போராட்டம் நடைபெறும் என விசிகவின் கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர் வக்கீல் ஜீவா தலைமையில் லட்சிவாக்கம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் 2 நாள் போராட்டத்துக்கு பிறகு கலெக்டர், எம்எல்ஏ ஆகியோர் அக்கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, அப்பகுதியை சேர்ந்த 43 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. எனினும், இவர்களுக்கு பட்டா வழங்கி 4 மாதங்களுக்கு மேலாகியும், அந்த இடத்தை அளவீடு செய்யும் பணி நடைபெறவில்லை.

இதைத் தொடர்ந்து, பட்டா வழங்கப்பட்ட 43 பேருக்கு உடனடியாக இடத்தை அளவீடு செய்து வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்படி, ஊத்துக்கோட்டை தாசில்தார் வசந்தி மேற்பார்வையில், மண்டல துணை வட்டாட்சியர் டில்லிராணி, வருவாய் ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் நேற்று பெரம்பூர் பகுதியில் போலீஸ் பாதுகாப்புடன் பட்டா வழங்கப்பட்ட 43 பேருக்கு இடங்களை அளவீடு செய்து ஒப்படைத்தனர். இப்பணியின்போது விசிகவின் தொகுதி செயலாளர் வக்கீல் ஜீவா, கண்ணன் உள்பட பலர் உடனிருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம்: வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு