மனஊக்கம்தான் வெற்றிக்கான உந்துசக்தி!

மனிதனின் செயல்களுக்கு பின்னால் மறைந்திருக்கும் மிகப்பெரிய சக்தியே ஊக்கம். ஒருவர் கடற்கரையில் காலை வேளையில் நடைப் பயிற்சி செய்துகொண்டிருந்தார். அப்போது பெரும் கடல் அலைகளால் நூற்றுக்கணக்கான நட்சத்திர மீன்கள் அடித்துவரப்பட்டு கரை ஒதுங்கின. அவற்றின் மீது சூரிய ஒளிபட்டு சிறிது நேரத்தில் இறந்துபோகும். அப்போது நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தவர் கரை ஒதுங்கிய நட்சத்திர மீன்களை ஒவ்வொன்றாக எடுத்து கடலில் வீசினார். இவ்வாறு ஒவ்வொரு முறையும் பெரிய அலைகளால் அடித்து வரப்படும் நட்சத்திர மீன்களைக் கடலில் வீசிக்கொண்டே இருந்தார்.இவரின் இந்த செயலைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றொருவருக்கு ஒன்றும் புரியவில்லை, நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இங்கு நூற்றுக்கணக்கான நட்சத்திர மீன்கள் அடித்து வரப்படுகின்றன. அவற்றில் எத்தனை மீன்களை உங்களால் காப்பாற்ற முடியும்? என்று கேட்டார். அதற்கு அவர் பதில் சொல்லவில்லை. இன்னும் இரண்டு அடி எடுத்து வைத்து இன்னொரு நட்சத்திர மீனை எடுத்து கடலில் வீசி இப்போது இந்த மீனையும் நான் காப்பாற்றிவிட்டேன் என்றார். மனஊக்க சக்திகள் மனிதர்களின் நடத்தைக்கு உந்து சக்தியாக செயல்படுகின்றன என்பதற்கு இந்த கதை மிகச் சிறந்த உதாரணம்.

மனித வாழ்வில் சிந்திக்கத் தெரிந்தவருக்கு அடுத்தவரின் ஆலோசனை தேவை இல்லை. அதுபோல் துன்பங்களையும், துயரங்களையும் சந்திப்பவருக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை. மேலிருந்து கீழே விழுகின்ற பஞ்சு தான் இருந்த இடத்திற்கு மீண்டும் பறந்து செல்ல முயன்று கொண்டே இருக்கும். இதுபோன்று நீங்களும் சாதிக்க வேண்டும் என்றால் தொடர்ந்து முயன்றுகொண்டே இருங்கள். தொடக்கத்தில் முயற்சிகள் ஒரு வேளை தவறலாம். ஆனால் முயன்று கொண்டே இருங்கள். நிச்சயம் வெற்றி ஒரு நாள் உங்களை சந்திக்கும். இதற்கு உதாரணமாய் இந்த சாதனைப் பெண்மணியை சொல்லலாம்.பெருமூளை வாதநோய் (cerebral palsy) சாதாரண மற்ற நோய்கள் போல் அல்ல. இது உடல் இயக்கத்தையே முடக்கி தசை நார் இயக்கங்களையே முடக்கிப்போடும் ஒரு விதமான கொடூரமான நோய். இத்தகைய நோயால் பாதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த ஏ.கே.சரிகா சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.

இவரது பெருமூளை வாதநோயால் இவரது வலது கை செயலிழந்துள்ளது, மோட்டார் பொருத்தப்பட்ட தன் சக்கர நாற்காலியை தன் இடது கையால் இயக்கி நகரும் சரிகா, சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் தன் இரண்டாவது முயற்சியில் தேர்ச்சி பெற்று 922-ம் ரேங்க் எடுத்து சாதித்துள்ளார்.தேர்ச்சி பெறுவேன் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். இப்போது மகிழ்ச்சியுடன் இருக்கிறேன், என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என்கிறார் சரிகா. அவருடைய பள்ளி ஆசிரியர் அப்துல் ரகுமான்தான் முதன் முதலில் சரிகாவை ஊக்கப்படுத்தி யுபிஎஸ்சி தேர்வு எழுதி உயர் அதிகாரியாக உருவாக வேண்டும் என்று ஆர்வத்தை ஏற்படுத்தினார். இது சரிகாவின் ஆழ் மனதில் ஆழமாக பாதித்தது. இதனால் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி உயர் அதிகாரியாக உருவாக வேண்டும் என்ற உயர்ந்த இலக்கை தீர்மானித்தார் சரிகா. அதன் பிறகு ஆசிரியர் அப்துல் ரகுமானின் உதவியால் தேர்வுக்கான பயிற்சியும் எடுத்துக்கொண்டார்.

யுபிஎஸ்சி தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தினார். அவருடைய குடும்பத்தினர், ஆசிரியர்கள் ஆகியோர் அவரை தொடர்ந்து ஊக்கப்படுத்தினார்கள்.அவர்களின் ஊக்கத்தினால்தான் தன்னால் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற முடிந்தது என சரிகா தெரிவித்துள்ளார்.சிவில் சர்வீஸ் தேர்வு பல்வேறு கட்டங்களை கொண்ட கடினமான தேர்வு என்பது எல்லோரும் அறிவோம். அத்தகைய தேர்வை சரிகா துணிச்சலுடன் எதிர் கொண்டார். முதன்மைத் தேர்வு கோழிக்கோட்டிலேயே நடந்ததால் சிரமம் இன்றி தேர்வு எழுதினார். ஆனால், பிரதான தேர்வுகளுக்காக திருவனந்தபுரம் செல்ல வேண்டியிருந்தது. உடல் இயக்கம் முடக்கப்பட்ட நிலையில் எப்படி செல்வது? எனவே திருவனந்தபுரத்திற்கே சென்று அங்கு வாடகை வீடு எடுத்துத் தங்கி தேர்வுக்கு ஆட்டோவில் சென்று தேர்வு எழுதினார் சரிகா. கத்தாரில் பணியாற்றிய அவரது தந்தை தன் மகளின் தேர்வுக்காகவே அங்கிருந்து வந்தார். சரிகாவின் வலது கை பயன்படுத்தக்கூடிய நிலை இல்லாததால் தேர்வு எழுதுவதற்கு சிறப்பு அனுமதி வாங்கி எழுத்தர் ஒருவரை நியமித்து அவர் மூலம் தேர்வை எழுதினார். பிரதான தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு டெல்லிக்கு நேர்காணலுக்குச் சென்றார், அங்கு அவர் கேரளா ஹவுஸில் தங்கினார். நேர்காணல் சுமுகமாக நடந்தது, 5 பேர் கொண்ட குழு அவரை நேர்காணல் செய்தார்கள்.அவருடைய சுயவிவர விண்ணப்பத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டன. அவருடைய சொந்த ஊர் மற்றும் நடப்பு விவகாரங்கள் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. அனைத்துக் கேள்விக்கும் சிறப்பாக பதில் அளித்து நேர்காணலில் தேர்ச்சி பெற்றார் சரிகா.

23 வயதான சரிகாவின் வலது கையில் குறைந்தபட்ச இயக்கம் மட்டுமே உள்ளது, அதே சமயம் இடது கையின் மூன்று விரல்கள் மட்டுமே வேலை செய்கின்றன. மோட்டார் இயக்கப்படும் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும்போது, ​மீதமுள்ள இரண்டு விரல்களை நகர்த்தப் பயன்படுத்துகிறார். இத்தகைய நிலையில் கடினமான தேர்வாக பார்க்கப்படுகின்ற யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.இதன் மூலம் சரிகா யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மூளை வாதம் கொண்ட முதல் நபர் என்ற வரலாற்றுச் சாதனையை புரிந்துள்ளார். மன ஊக்கத்துடன் செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம் என்பதே இவரது வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.

 

Related posts

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி அறிவிப்பு

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு