ஆன்லைன் மோசடியில் இழந்த ரூ.1.21 கோடி மீட்பு

*உரியவர்களிடம் ஒப்படைத்த சைபர் கிரைம் போலீசார்

ஊட்டி : நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மோசடியாளர்களிடம் இருந்து ரூ.1.21 கோடி பணத்தை மீட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைத்தனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியை சேர்ந்த மெகுல் ஷா என்பவர் கடந்த ஆண்டு வாட்ஸ் அப் மற்றும் டெலி கிராம் மூலம் அடையாளம் தெரியாத நபரால் வந்த லிங்க்கை கிளிக் செய்துள்ளார். அதில் வந்த ஆன்லைன் டாஸ்க் பயன்படுத்தியபோது பணம் அனுப்பினால் அதற்கு ஈடாக இரட்டிப்பு பணம் கிடைக்கும் என கூறப்பட்டது. இதையடுத்து மெகுல் ஷா பல கட்டங்களாக ரூ.92 லட்சத்து 77 ஆயிரத்து 839 ரொக்கத்தை கொடுத்துள்ளார். இது குறித்து ஊட்டி மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இப்புகாரின் பேரில் மோசடியில் ஈடுபட்டதாக சேலம் இளம்பிள்ளை பெருமாள் கவுண்டன்பட்டியை சேர்ந்த எழில் ராஜா (32), தென்காசியை சேர்ந்த முத்துராஜ் (32), பாலசுப்பிரமணியம் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பணம் மீட்கப்பட்டது. இந்த நிலையில் மெகுல்ஷா உட்பட ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கு மீட்கப்பட்ட பணத்தை வழங்கும் நிகழ்ச்சி ஊட்டி சிறுவர் மன்றத்தில் நடந்தது. சைபர் கிரைம் கூடுதல் எஸ்பி சௌந்தரராஜன் முன்னிலை வகித்தார்.

மாவட்ட எஸ்பி பிரபாகர் தலைமை வகித்து மெகுல் ஷாவிற்கு ரூ.92.77 லட்சத்திற்கான காசோலை வழங்கினார். மொத்தம் ரூ.1 கோடியே 21 லட்சத்து 45 ஆயிரத்து 587 ரொக்கம் பாதிக்கப்பட்ட மனுதாரர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டதற்கான சான்றினை வழங்கினார். தொடர்ந்து நீலகிரி மாவட்டம் முழுவதும் செல்போன் காணாமல் போனது தொடர்பாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் ரூ.17 லட்சம் மதிப்பிலான 80 உயர் ரக செல்போன்கள் மீட்கப்பட்டு அவை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட எஸ்பி பிரபாகர் கூறுகையில், ‘‘நீலகிரி சைபர் கிரைம் காவல் நிலையம் மூலம் கூடுதல் எஸ்பி தலைமையில் ஆன் லைன் பண மோசடி, லோன் ஆப் மூலம் மோசடி, மார்பிங், ஆன்லைன் மூலம் ஆபாச படங்களை மற்றவர்களுக்கு அனுப்புவது போன்ற குற்றங்கள் கண்காணிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ.60 லட்சம் மதிப்பிலான 180 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது ஆன்லைன் மோசடியால் பணத்தை இழந்த நபர்களின் ரூ.1.21 கோடி பணம் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

இதுதவிர 80 செல்போன்களும் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டன. ஆன்லைன் மோசடி தொடர்பாக பொதுமக்கள் விழிப்புணர்வாக இருப்பதுடன், அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும். சைபர் கிரைம் சம்பந்தமாக பள்ளி, கல்லூரிகள், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது’’ என்றார். இந்த நிகழ்வின்போது சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ், உதவி ஆய்வாளர் கலைவாணி உட்பட பலர் உடன் இருந்தனர்.

Related posts

சதுரகிரி மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்