வரத்து குறைவு காரணமாக கோயம்பேட்டில் வெங்காயம் விலை ‘கிடுகிடு’: ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.120,

* புறநகரில் ரூ.150; மற்ற காய்கறிகள் விலை சரிவு

சென்னை: வரத்து குறைவு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் தினமும் 650 லாரிகளில் 7,000 டன் காய்கறிகள் வருகிறது. தினமும் 60 சரக்கு வாகனங்களில் வெங்காயம் வருகிறது. இந்த நிலையில், வரத்து குறைவு காரணமாக நேற்று காலை 36 சரக்கு வாகனங்களில் குறைவான வெங்காயம் வந்துள்ளது. இதன்காரணமாக, ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.70, சின்ன வெங்காயம் ரூ.120, சென்னை புறநகர் கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.90, சின்ன வெங்காயம் ரூ.150க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், தக்காளி, பீன்ஸ், முள்ளங்கி போன்ற காய்கறிகள் 6,500 டன்கள் வந்து குவிந்தன. இதனால், அவற்றின் விலை குறைந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ தக்காளி ரூ.30ல் இருந்து ரூ.25, பீன்ஸ் ரூ.120 லிருந்து ரூ.80, முள்ளங்கி ரூ.70 லிருந்து ரூ.60, கேரட் ரூ.35 லிருந்து ரூ.25, பீட்ரூட் ரூ.35, சவ்சவ் ரூ.25, முட்டை கோஸ் ரூ.15, பாவற்காய், வெண்டைக்காய் ரூ.30, கத்திரிக்காய் ரூ.25, காராமணி ரூ.40, புடலங்காய் ரூ.20, சுரைக்காய் ரூ.25,சேனைக்கிழங்கு ரூ.50, முருங்கைக்காய், பட்டாணி ரூ.90, சேனை கிழங்கு ரூ.30 காலிபிளவர், கோவக்காய் ரூ.20, பச்சைமிளகாய் ரூ.60, அவரைக்காய் ரூ.70, பீர்க்கங்காய் ரூ.40, நூக்கல் ரூ.40, கொத்தவரங்காய் ரூ.25 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து, கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ் முத்துகுமார் கூறும்போது, ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் பெரிய மற்றும் சின்ன வெங்கயத்தின் விலை உயர்ந்துள்ளது. நாசிக்கில் இருந்து வரும் முதல் தரம் வெங்காயம் ரூ.70, பெங்களூரூவில் இருந்து வரும் 2ம் தர வெங்காயம் ரூ.60, ஆந்திராவில் இருந்து வரும் 3ம் தரம் வெங்காயம் விலை ரூ.50க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரத்து அதிகாரிப்பால் மற்ற காய்கறிகளின் விலை குறைந்துள்ளது,’’ என்றார்.

Related posts

3 கி.மீ. தூரம் பேருந்திற்கு வழிவிடாமல் அடம்பிடித்த ஆட்டோ ஓட்டுநர்: ஹாரன் அடித்ததால் அரிவாளைக் காட்டி மிரட்டல்

மருத்துவ சிகிச்சையில் ஏற்படும் தவறுகளுக்காக மருத்துவர்களை சிறையில் அடைக்கும் தண்டனை பிரிவை நீக்குக: கலாநிதி வீராசாமி

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்