ஒரு மாத பெண் குழந்தை ரூ.3 லட்சத்திற்கு விற்பனை: தந்தை உள்பட 4 பேர் கைது

ஒட்டன்சத்திரம்: மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தையை ரூ.3 லட்சத்திற்கு விற்றதாக தந்தை உள்பட 4 ேபரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே தாதகவுண்டனூரை சேர்ந்த தம்பதி கோபி – ருக்மணி. இவர்களுக்கு 5 வயது, 3 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ருக்மணிக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. வறுமை காரணமாக குழந்தையை விற்பதற்கு தந்தை கோபி முடிவு செய்தார். இதையடுத்து அதே ஊரை சேர்ந்த மணிகண்டன், ஒட்டன்சத்திரம், காந்திநகரை சேர்ந்த தேன்மொழி, கரூர் மாவட்டம், பரமத்திவேலூரை சேர்ந்த தமிழரசி ஆகியோர் உதவியுடன், பரமத்திவேலூரைச் சேர்ந்த முருகேசனுக்கு ரூ.3 லட்சத்துக்கு பெண் குழந்தையை கோபி விற்பனை செய்துள்ளார்.

இதுகுறித்து உறவினர் கேட்டபோது குழந்தை இறந்து விட்டதாகவும், மயானத்தில் புதைத்து விட்டதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பாத உறவினரை, கோபி பொய் புகார் கொடுத்து ஒட்டன்சத்திரம் போலீசில் சிக்க வைத்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்ததில் கோபி குழந்தையை விற்ற விவகாரம் தெரியவந்தது. இதையடுத்து ஒட்டன்சத்திரம் மகளிர் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கோபி, மணிகண்டன், தேன்மொழி, தமிழரசி ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்தார்.

Related posts

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு