ஒரு லட்சம் பேரிடம் ரூ.2,438 கோடி வசூலித்து மோசடி ஆருத்ரா கோல்டு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்: நிதி நிறுவன மோசடி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: ஒரு லட்சம் பேரிடம் ரூ.2,438 கோடி வசூலித்து மோசடி செய்த வழக்கில் பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். சென்னையை தலைமையகமாக கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், தங்களிடம் ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.36 ஆயிரம் வட்டி வழங்கப்படும் என்று விளம்பரம் செய்தது.

இதை உண்மை என்று நம்பி தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் பேர் இந்த நிதிநிறுவனத்தில் ரூ.2,438 கோடி முதலீடு செய்தனர். ஆனால், சொன்னபடி வட்டி, அசல் ஆகியவற்றை நிறுவனம் தரவில்லை. இது தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் நிதி நிறுவனத்தில் ஒரு லட்சத்து 9,259 பேரிடம் மொத்தம் ரூ.2,438 கோடி முதலீடு பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.

இதில் முக்கிய குற்றவாளிகளான நிறுவனர் ராஜசேகர், உஷா, மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், நாகராஜன், பேச்சிமுத்துராஜா, நடிகர் ரூசோ ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடியில் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தமிழக பாஜ ஓ.பி.சி. பிரிவு துணை தலைவர் ஆர்.கே.சுரேசுக்கும், பாஜ நிர்வாகி ஹரீஷுக்கும் தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. ஆர்.கே.சுரேஷ், ரூ.13 கோடி ஏமாற்றியுள்ளார்.

இந்நிலையில், முகப்பேர் கிழக்கு உஷா, பூந்தமல்லி தீபக் கோவிந்த் பிரசாத், நாராயணி, செங்கல்பட்டு ருமேஷ்குமார் ஆகிய 5 பேர் தலைமறைவுக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், அந்நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.96 கோடி முடக்கப்பட்டது. 21 பேர் மீது பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று நிதி நிறுவன மோசடி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.கருணாநிதி முன்பு முதல்கட்ட குற்றப்பத்திரிகையை பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.பாபு தாக்கல் செய்தார்.

குற்றப்பத்திரிகையில் 360 முதலீட்டாளர்களிடம் ரூ.17 கோடியே 50 லட்சம் மோசடி நடந்ததாக வந்த புகார்களின் அடிப்படையில் 40 பேர் மீது 50 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஆர்டிஓ விசாரணையில் உள்ள ஒரு லட்சத்து 9,259 பேரிடம் ரூ.2,438 கோடி மோசடி நடந்தது தொடர்பான 3000 பக்கங்கள் அடங்கிய கூடுதல் குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.பாபு தெரிவித்துள்ளார். இவற்றை நீதிபதி ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி இவற்றின் நகல் அவர்களுக்கு வழங்கப்படும். அதன்பிறகு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு சாட்சி விசாரணை நடைபெறும்.

* விரைவில் கூடுதல் குற்றப்பத்திரிகை
மேலும் இந்த வழக்கில் கூடுதல் விசாரணை தகவல்கள் மற்றும் சாட்சிகளுடன் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். குறிப்பாக நடிகர் ஆர்.கே.சுரேஷ், இந்தியா திரும்பியவுடன் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அடுத்த குற்றப்பத்திரிகையில் அவரது குற்றங்களும் சேர்க்கப்படும் என்றும் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

* ஒரு லட்சத்து 9,259 பேரிடம் ரூ.2,438 கோடி மோசடி நடந்தது தொடர்பான 3000 பக்கங்கள் அடங்கிய கூடுதல் குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.பாபு தெரிவித்துள்ளார்.
* இவற்றை நீதிபதி ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி இவற்றின் நகல் அவர்களுக்கு வழங்கப்படும்.
* இதன்பின் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு சாட்சி விசாரணை நடைபெறும்.

Related posts

மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 55 வருடம் சிறை

ஆந்திரா-தெலங்கானா முதல்வர்கள் சந்திப்பு; இருமாநில சொத்துக்கள் பிரிக்க விரைவில் குழு அமைப்பு

தமிழ்நாட்டில் 3 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது