ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒன்றிய அரசு 3 சட்டங்களை கொண்டு வருவதற்கு திட்டம்!!

டெல்லி : ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒன்றிய அரசு 3 சட்டங்களை கொண்டு வருவதற்கு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் முதலாவது சட்டம் மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒன்றாக நடத்துவதற்கு அரசமைப்பு திருத்தச் சட்டமாக இருக்கும். 2வதாக உள்ளாட்சித் தேர்தல்களை மக்களவை தேர்தல் மற்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுடன் இணைத்து நடத்துவதற்கு வசதி செய்யும் அரசமைப்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கு 50% மாநிலங்களின் ஒப்புதல் தேவைப்படும். 3வதாக புதுச்சேரி, டெல்லி மற்றும் ஜம்மு -காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேச சட்டசபை பதவிக்காலத்தை மற்ற சட்டசபை பதவிக்காலத்துடன் ஒத்திருக்கும்படி மாற்ற ஒரு சட்டம் இயற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கான சாத்திய கூறுகள் தொடர்பான பரிந்துரையை முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்தது. அந்த பரிந்துரையில் அரசமைப்பு சட்டத்தின் 3 பிரிவுகளில் மற்றும் 12 உப பிரிவுகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் சட்டப்பேரவைகள் உள்ள யூனியன் பிரதேசங்கள் குறித்த சட்டங்களிலும் திருத்தம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. ராம்நாத் குழுவின் அறிக்கையில் ஒரே நாடு ஒரே தேர்தலை 2 கட்டமாக நடத்த பரிந்துரைக்கப்பட்டது. முதல் கட்டத்தில் மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் அடுத்த 100 நாட்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Related posts

காலாண்டு விடுமுறை காரணமாக ஏலகிரி மலையில் திரண்ட சுற்றுலா பயணிகள்

திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

மீஞ்சூர் அருகே தோட்டக்காடு பகுதியில் முன்பகை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு