ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி

சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் இந்த நாட்டிற்கு காலத்தின் கட்டாயமாக உள்ளதுஎன்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். போரூர் அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி மாணவி ஒருவர் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு 800 கிலோ சிறு தானியங்களைக் கொண்டு 12 மணி நேரத்தில் 600 சதுர அடியில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை வரைந்து உலக சாதனை புரிந்தார். இந்த ஓவியத்தை ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் இந்த நாட்டிற்கு காலத்தின் கட்டாயமாக உள்ளது. இதற்காக பெரிய அளவில் கமிட்டி அமைக்கப்பட்டு, கருத்து கேட்டு, அதன் அடிப்படையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கையை தந்துள்ளார்கள். தமிழர் ஒருவர் நாட்டை ஆள வேண்டும் என்பது வரவேற்கக்கூடியது. இது பெரிய தேசம், யார் வேண்டுமானாலும் ஆளலாம். நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை.

மாறாக பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். அரசியலில் விஜய் பொதுவான நபராக இருப்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டுமென்றால் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்லக்கூடிய தலைவராகதான் ஒரு அரசியல் கட்சியை நிர்வகிக்க முடியும். அனைத்து தரப்பு மக்களையும் சமமாக விஜய் பாவிப்பாரா என்பது கேள்விக்குறிதான். இவ்வாறு அவர் கூறினார்.

* ‘புற்றுநோய் அற்ற சமுதாயத்தை உருவாக்க ஒன்றிணைவோம்’
ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘உலகம் முழுவதும் புற்றுநோய் குறித்த முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்துகிற நோக்கில், இன்றைய தினமானது ‘ரோஸ் தினமாக’ அனுசரிக்கப்படுகிறது. பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய மற்றும் சிகிச்சைக்கான வசதி இல்லாத குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கான முழுமையான சிகிச்சையளித்து வருகின்ற, ‘ரே ஆஃப் லைட்’ அறக்கட்டளையில் உள்ள குழந்தைகளை இன்று நேரில் சந்தித்தேன்.

காஞ்சி காமகோடி அறக்கட்டளையின் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகின்ற அந்தக் குழந்தைகளிடம் நேரடியாக கலந்துரையாடி, அவர்களுக்கான பரிசுப் பொருட்கள் வழங்கி மகிழ்ந்தோம். இக்குழந்தைகள் அனைவரும், கூடிய விரைவில் சிகிச்சைகளிலிருந்து மீண்டு வந்து சமுதாயப் பணியாற்றுவார்கள். புற்றுநோய் அற்ற சமுதாயத்தை உருவாக்கிட, அனைவரும் பாகுபாடின்றி ஒன்றிணைவோம்’’ என கூறியுள்ளார்.

மற்றொரு பதிவில், ‘‘செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற இந்திய அணி, ஸ்லோவேனியா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஸ்ரீநாத் நாராயணன் தலைமையில் கலந்து கொண்ட இந்திய அணி வீரர்கள், தங்களது சிறப்பான செயல்பாடு மற்றும் அறிவார்ந்த திறன் மூலம் இந்த வெற்றி பெற்றுள்ளார்கள்.

தமிழகத்தைச் சேர்ந்த ப்ரக்ஞானந்தா மற்றும் குகேஷ், அர்ஜூன் எரிகேசி, விதித் குஜ்ராத்தி, பென்டலா ஹரிகிருஷ்ணா ஆகியோர் ஒன்றிணைந்து பெற்றுள்ள இந்த தங்கப் பதக்கமானது, இந்திய மக்களை பெருமையடையச் செய்துள்ளது. அனைவருக்கும் எனது அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Related posts

மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி தேவநாதன் மீது 4,100 புகார்கள் குவிந்தன: 4 சொகுசு கார்கள், ரூ.1 கோடி மதிப்பிலான பத்திர ஆவணங்கள் பறிமுதல்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் 118 ஏக்கரில் பசுமைவெளி சுற்றுச்சூழல் பூங்கா: தமிழக அரசாணை வௌியீடு