‘மூன்றில் ஒரு பங்கு’

எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை நாடாளுமன்ற நடவடிக்கைகள் நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு காரணம் 10 ஆண்டுக்கு பிறகு எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதிலளிக்க முதன் முறையாக பிரதமர் மோடி தனது இருக்கையில் இருந்து எழ வேண்டியிருந்தது. மற்றொரு அம்சம் ராகுல்காந்தியின் அனல்பறந்த பேச்சு. இதற்கு பதிலளிக்க முடியாத பிரதமர் மோடி மறுநாள் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்களின் கூட்டத்தை கூட்டி ஆலோசித்த பிறகு நாடாளுமன்றத்தில் பதிலுரை ஆற்றியது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையை பார்க்கும் போது அவருக்கு மட்டுமல்ல பாஜ கூடாரத்தில் அச்ச உணர்வு நிலவி வருகிறது என்பது தெளிவாக தெரிகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத பிரதமர் மோடி, ராகுலை குழந்தை தனமானவர், சபையின் அனைத்து விதிகளையும் மீறிவிட்டார் என்று வழக்கம் போல் விமர்சித்தாரே தவிர, நீட் குறித்தோ, மணிப்பூர் குறித்தோ பேசவே இல்லை. இதையடுத்து மக்களவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு, மறுநாள் மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரை ஆற்றிய மோடி, மணிப்பூர் மாநிலம் குறித்து பேசினார். அதேபோன்று எமர்ஜென்சி குறித்து பேசி எப்போதும் போன்று காங்கிரசை குற்றம்சாட்டினார். ஆனால் தற்போது நடந்து வரும் பிரச்னைகள் குறித்து வாய்திறக்கவே இல்லை.

இந்நிலையில், முந்தைய தேர்தல்களை விட கடந்த தேர்தலில் பாஜ வாக்குவங்கி சரிந்துள்ளதை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் பொது செயலாளர் ஜெயராம் ரமேஷ், ‘சந்திரபாபுநாயுடு, நிதிஷ்குமார் ஆதரவுடன் பாஜ ஆட்சியமைத்திருப்பதால் மோடி ‘மூன்றில் ஒரு பங்கு பிரதமர்’ என குறிப்பிட்டிருந்தார். இந்த விமர்சனத்தை தாங்கிக்கொள்ள முடியாத மோடி, மாநிலங்களவையில் பதில் அளிக்கும் போது, நாங்கள் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளோம். இன்னும் 20 ஆண்டுகள் மிச்சமிருக்கிறது. மூன்றில் ஒரு பங்கு முடிந்துள்ளது. இன்னும் இரண்டு பங்கு பாக்கியுள்ளது என்று திரித்து பேசினார்.

இது குறித்து கருத்து தெரிவித்த ஜெயராம் ரமேஷ், மூன்றில் ஒரு பங்கு என்பதை தனக்குரிய பாணியில் திரித்து பேசும் பிரதமர் மோடி அவர்களே, அது உங்கள் ஆட்சிக்காலத்தை குறிப்பதல்ல. உயிரியல் ரீதியாக பிறக்காத உங்களைத்தான் குறிக்கிறது என்று கிண்டலடித்துள்ளார். இப்படி காங்கிரசின் சரமாரியான சாட்டையடிக்கு பதிலளிக்க முடியாமல் பிரதமர் மோடி, ஒவ்வொரு கருத்துக்கும் வேறு கருத்தை திரித்து கூறி முட்டுக்கொடுத்து வருகிறார்.

மோடியின் நாற்காலி ஸ்திரத்தன்மையுடையது அல்ல. எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்பது காங்கிரசின் கருத்தாக இருக்கிறது. தேர்தலில் தார்மீக ரீதியாக பாஜ தோல்வியை தழுவியுள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பறந்து பறந்து பிரசாரம் செய்து, ரோடுஷோ நடத்திய போதிலும் மோடியை மக்கள் ஏற்கவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாக காட்டியுள்ளது. அதே சமயம் காங்கிரசுக்கு பலமான எதிர்க்கட்சி பொறுப்பை மக்கள் வழங்கியுள்ளனர். இதை தான் மோடி உள்ளிட்ட பாஜ தலைவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. நிச்சயம் அடுத்த முறை ஆட்சி அதிகாரத்தை காங்கிரசிடம் மக்கள் ஒப்படைப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு