ஓணம் பண்டிகையை முன்னிட்டு கம்பம் உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை ஜோரு: மகிழ்ச்சியில் விவசாயிகள்

கம்பம்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கம்பம் உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தமிழக அளவில் கம்பம் உழவர் சந்தை காய்கறிகள் விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக தமிழக கேரள எல்லையில் உள்ள கம்பம் உழவர் சந்தைக்கு கேரளாவில் இருந்து நாள்தோறும் ஏராளமான வியாபாரிகள் வருகை தருகின்றனர். இதனால் கம்பம் உழவர் சந்தையில் சராசரியாக 30 டன் வரை காய்கறிகள் விற்பனை நடந்து வருகிறது.

கம்பம் உழவர் சந்தையிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் வியாபாரிகள் விற்பனை செய்து தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால், கடந்த இரு தினங்களாக கம்பம் உழவர் சந்தையில் கேரளாவைச் சேர்ந்த வியாபாரிகள் அதிக அளவில் காணப்பட்டனர். இதனால் நாள்தோறும் விற்பனையாகும் 30 டன் காய்கறிகளை விட அந்த இரு தினங்களாக 5 முதல் 10 டன் அதிகரித்து சுமார் 40 டன் வரை தினசரி காய்கறி வியாபாரம் நடந்ததாக உழவர் சந்தை

அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதனால் உழவர் சந்தையில் உள்ள விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விற்பனை அதிகரித்த நிலையிலும் காய்கறிகளுக்கு விலை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் விற்பனையான விலைப்பட்டியலுடன் இந்த வருடம் விற்பனையாகும் காய்கறிகளின் விலை பட்டியலை ஒப்பிடும்போது பாதிக்கு மேல் விலை குறைவாக இந்த வருடம் காய்கறிகள் விற்பனையாவது தெரிய வந்துள்ளது.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்