ஓணம், புரட்டாசி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு: பம்பைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகை, புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை (13ம் தேதி) திறக்கப்படுகிறது. அதையொட்டி கேரள கேரள அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பம்பைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த வருடம் புரட்டாசி மாத தொடக்கமும், ஓணம் பண்டிகையும் அடுத்தடுத்து வருகிறது. இதை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. 21ம் தேதி வரை தொடர்ந்து 8 நாட்கள் கோயில் நடை திறந்திருக்கும்.

நாளை மாலை 5 மணிக்கு சபரிமலை தந்திரி பிரம்மதத்தன் நம்பூதிரி முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி கோயில் நடை திறப்பார். அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளை மறுநாள் (14ம் தேதி) முதல் ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகள் தொடங்கும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் பக்தர்களுக்கு ஓண விருந்து அளிக்கப்படுகிறது. வரும் 21ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். நிலக்கல் மற்றும் பம்பை ஆகிய இடங்களில் உடனடி முன்பதிவு கவுண்டர்களும் திறக்கப்படும்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், திருவனந்தபுரம், செங்கணூர், கோட்டயம், பத்தனம்திட்டா, கொல்லம், எர்ணாகுளம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பம்பைக்கு கேரள அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்