ஆம்னி பஸ் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு: 30 பயணிகள் உயிர் தப்பினர்

கோவை: திருவண்ணாமலையில் இருந்து நேற்று அதிகாலை கோவை காந்திபுரம் நோக்கி தனியார் ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது. இதில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அதிகாலை கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வந்தபோது பஸ்சின் முன்பகுதியில் இருந்து புகை வெளியேறியது. உஷாரான டிரைவர் தாசன் (36) மற்றும் உதவியாளர் உடனடியாக பஸ்சை நிறுத்தி, பஸ்சில் தீ என சத்தம் போட்டனர். தூக்க கலக்கத்தில் இருந்த பயணிகள் அலறியபடி உடைமைகளுடன் வேகமாக இறங்கினர். பீளமேடு தீயணைப்பு துறையினர் வந்து தீயை கட்டுப்படுத்த முயன்றனர். அதற்குள் பஸ் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. பஸ்சில் தீப்பிடித்து எரிந்தபோது அந்த வழியாக சென்றவர்கள் எடுத்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

லாரி, பஸ் மோதல்: திருச்சியில் இருந்து சென்னைக்கு நேற்றுமுன்தினம் இரவு 11.15 மணியளவில் அரசு பஸ் புறப்பட்டது. காஞ்சிபுரத்தை சேர்ந்த சுந்தர்சி என்பவர் ஓட்டினார். கண்டக்டராக சென்னை சுரேஷ் இருந்தார். நள்ளிரவு 12.15 மணியளவில் சமயபுரம் அடுத்த சிறுகனூர் வந்தபோது, திருச்சியில் இருந்து சென்னைக்கு மணல் ஏற்றி சென்ற லாரியின் பின்பகுதியில் அரசு பஸ் மோதியது. இதில் பஸ் டிரைவருக்கு 2 கால் எலும்புகளும், கண்டக்டருக்கு ஒரு கால் எலும்பும், சிறுவனுக்கு கை எலும்பு முறிவும் ஏற்பட்டது. ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற சென்னையை சேர்ந்த 12 மாணவர்கள் மற்றும் 3 பயணிகள் உள்பட மொத்தம் 26 பேர் பலத்த காயமடைந்தனர்.

Related posts

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு