பாரீசில் காத்திருக்கும் சவால்; ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா?

புதுடெல்லி: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26ம்தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. 32 விளையாட்டுக்களில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. இதில் 200 நாடுகளில் இருந்து 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். இந்தியாவின் சார்பில் 117 வீரர், வீராங்கனைகள் களம் இறங்க உள்ளனர். கடந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம் உள்பட 7 பதக்கம் வென்ற நிலையில் இந்த முறை அதைவிட அதிக பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா, 87.58 மீட்டர் தூரம் வீசி தங்கம் வென்றார். இந்த ஒலிம்பிக்கிலும் நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 28 வயதான நீரஜ் சோப்ராவுக்கு இந்த முறை கடும் சவால் காத்திருக்கிறது. 2024 சீசனின் சிறந்த அதிக தூரம்வீசியவர்கள் பட்டியலில், நீரஜ் சோப்ரா 4வது இடத்தில் உள்ளார். செக் குடியரசை சேர்ந்த 33 வயதான ஜக்குப்வட்லெஜ்ச், இந்த சீசனில் 88.65 மீட்டர் வீசி உள்ளார். ஐரோப்பிய சாம்பியன் ஷிப்பில் தங்கம் வென்றார்.

90.88 மீட்டர் வீசியது அவரின் சிறந்த பதிவாக உள்ளது. ஜெர்மனியின் 29 வயதான ஜூலியன் வெபர், ஐரோப்பிய சாம்பியன் ஷிப்பில் 88.37மீட்டர் வீசி வெள்ளி வென்றார். இவரின் பெஸ்ட் 89.54 மீட்டராகும். டோக்கியோ ஒலிம்பிக்கில் 4வது இடம் பிடித்து பதக்கத்தை தவறவிட்ட வெபர் இந்த முறை கடும் சவால் அளிப்பார். ஜெர்மனியின் மற்றொரு வீரரான 19 வயது மேக்ஸ் டெஹ்னிங் அந்த ஆண்டின் தொடக்கத்தில் 90.20 மீட்டர் வீசினார். இதுவே இந்த ஆண்டின் சிறந்ததாக இதுவரை உள்ளது.

நீரஜ் சோப்ரா கடந்த 2022ம் ஆண்டு ஸ்வீடனில் நடந்த ஸ்டாக்ஹோம் டயமண்ட் லீக்கில் 89.94 மீட்டர் வீசியது தான் அவரின் சிறந்த பதிவாக உள்ளது. இதனால் மேற்கண்ட 3 பேரும் நீரஜ் சோப்ராவுக்கு கடும் சவால் அளிக்க காத்திருக்கின்றனர். இவர்களை தவிர கிரேனேடியனின் ஆண்டர்சன் பீட்டர்ஸ், பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் ஆகியோரும் பதக்க வேட்டையில் உள்ளனர்.

லக்‌ஷயா சென் நம்பிக்கை: ஒலிம்பிக்கில் பேட்மிண்டனிலும் இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு உள்ளது. பி.வி.சிந்து, பிரனாய், லக்‌ஷயா சென் மீது எதிர்பார்ப்பு உள்ளது. தனது முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள 22 வயதான லக்‌ஷயா சென், தீவிரமாக தயாராகி வருகிறார். எல் குரூப் பிரிவில் அவர், கடந்த ஒலிம்பிக்கில் 4வது இடம்பிடித்த கெவின்கார்டன், பெல்ஜியத்தின் ஜூலியன் கராகி உள்ளிட்டோருடன் மோத உள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “நான் முதலில் குழு பிரிவில் முதலிடம் பெறுவதில் கவனம் செலுத்துவேன் பின்னர் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். எனக்கு பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது” என்றார்.

Related posts

சீசனுக்கு முன்னதாகவே நீலகிரியில் நீர் பனி பொழிவு: தேயிலை விவசாயிகள் அச்சம்

தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்

திருப்பதி கோயில் பிரசாத லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு கலப்பு: வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்