ஒலிம்பிக் திருவிழா பாரிஸ் – 2024: ஹாக்கியில் அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா

ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, நேற்று தனது 3வது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணியுடன் மோதியது. தொடக்கத்தில் இருந்தே ஒருங்கிணைந்து விளையாடி ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் அபாரமாக 2 கோல் அடித்து வெற்றி தேடித் தந்தார். அவர் 11வது மற்றும் 19வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார். இடைவேளையின்போது இந்தியா 2-0 என முன்னிலை வகித்தது. விறுவிறுப்பான 2வது பாதியில் மேற்கொண்டு கோல் ஏதும் விழாததை அடுத்து, ஆட்ட நேர முடிவில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. நியூசிலாந்து அணிக்கு எதிராக 3-2 என்ற கோல் கணக்கில் வென்ற இந்தியா, அடுத்து அர்ஜென்டினாவுடன் 1-1 என டிரா கண்டது. 3வது போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய நிலையில், அடுத்து 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற பெல்ஜியம் அணியின் சவாலை நாளை எதிர்கொள்கிறது.

மனு பாக்கரின் சாதனைகள்
* 2004 ஏதன்ஸ் ஒலிம்பிக் போட்டியில் சுமா ஷிரூர் துப்பாக்கிசுடுதல் போட்டியின் பைனலுக்கு முன்னேறியிருந்தார். அதன் பிறகு 20 ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை மனு பாக்கருக்கு கிடைத்துள்ளது.
* ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய துப்பாக்கிசுடுதல் வீராங்கனை.
* ஏர் பிஸ்டல் பிரிவில் முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியர்.
* சுதந்திரத்துக்குப் பிறகு, ஒரே ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கம் வென்ற முதல் இந்தியர்.
* துப்பாக்கிசுடுதலில் 2 ஒலிம்பிக் பதக்கங்கள் வென்ற முதல் இந்தியர்.
* ஒலிம்பிக் துப்பாக்கிசுடுதல் குழு போட்டியில் பதக்கம் வென்ற முதல் இணை (மனு – சரப்ஜோத்).
* ஒலிம்பிக் தனிநபர், குழு பிரிவில் பதக்கங்கள் வென்ற முதல் இந்தியர்.
* பி.வி.சிந்துவுக்கு பிறகு 2 ஒலிம்பிக் பதக்கங்கள் வென்ற 2வது இந்திய வீராங்கனை.

* கால்பந்தை கைவிட்டு துப்பாக்கி பிடித்த சரப்ஜோத்!
மனு பாக்கருடன் இணைந்து இந்தியாவுக்காக 2வது பதக்கத்தை வென்றுள்ள சரப்ஜோத் (22 வயது), முதலில் கால்பந்து விளையாட்டில் தான் அதிக ஆர்வம் காட்டியுள்ளார். 13வது வயதில் அம்பாலா பப்ளிக் பள்ளியில் பயின்றபோது, கோடைகால முகாமில் சக மாணவர்கள் துப்பாக்கிசுடுதல் பயிற்சி பெற்றதை பார்த்து அதன் மீது கவனம் செலுத்தத் தொடங்கினார். ‘காஸ்ட்லி’ விளையாட்டான துப்பாக்கிசுடுதலுக்கு செலவழிக்க நிறைய கஷ்டப்பட்டாலும், சரப்ஜோத்தின் சாதனைகள் அவற்றை மறக்கடித்துவிட்டதாக பெருமையுடன் கூறுகிறார் அவரது தந்தை ஜிதேந்தர் சிங் (விவசாயி). 2 உலக சாம்பியன்ஷிப் தங்கம், 3 உலக கோப்பை தங்கம், 1 ஜூனியர் உலக கோப்பை தங்கம், ஆசிய சாம்பியன்ஷிப்பில் 1 வெள்ளி, 1 வெண்கலம் என சரப்ஜோத் வென்ற பதக்கங்களின் பட்டியல் நீள்கிறது.

* சாத்விக் சிராக் அமர்க்களம்
ஒலிம்பிக் பேட்மின்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு ஏற்கனவே முன்னேறிவிட்ட இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி – சிராக் ஷெட்டி இணை, சி பிரிவில் நேற்று இந்தோனேசியாவின் முகமது ரியான் அர்டியான்டோ – ஃபஜார் அல்பியான் ஜோடியுடன் மோதியது. அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த சாத்விக் – சிராஜ் இணை 21-13, 21-13 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று சி பிரிவில் முதலிடத்தை உறுதி செய்தது. இப்போட்டி 38 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

* டேபிள் டென்னிசில் மனிகா பத்ரா அசத்தல்
ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 16) முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமை மனிகா பத்ராவுக்கு (29 வயது, 28வது ரேங்க்) கிடைத்துள்ளது. பிரான்ஸ் வீராங்கனை பிரித்திகா பவாடே (19 வயது, 18வது ரேங்க்) உடன் நேற்று மோதிய மனிகா பத்ரா 4-0 என்ற செட் கணக்கில் (11-9, 11-6, 11-9, 11-7) அபாரமாக வென்று அசத்தினார். பிரித்திகா புதுச்சேரியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2003ல் தான் அவரது பெற்றோர் பிரான்சுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

Related posts

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்