இன்றுடன் முடிகிறது ஒலிம்பிக் திருவிழா: நள்ளிரவில் நிறைவு விழா கோலாகலம்

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வரும் 33வது கோடை கால ஒலிம்பிக் போட்டி இன்று நள்ளிரவு கோலாகலமான கொண்டாட்டத்துடன் நிறைவு பெறுகிறது. உலகின் முக்கிய விளையாட்டுத் திருவிழாவாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கோடை கால ஒலிம்பிக் போட்டி, இம்முறை பாரிசில் ஜூலை 26ம் தேதி தொடங்கியது. வழக்கமாக ஒலிம்பிக் தொடக்க விழா, கலை நிகழ்ச்சிகள் விளையாட்டு அரங்கங்களில்தான் நடைபெறும். ஆனால், இந்த முறை பாரிசில் உள்ள சென் ஆற்றில் நடைபெற்றது.

இரு கரைகளிலும் அமைக்கப்பட்டு இருந்த பார்வையாளர்கள் மாடங்களில் அமர்ந்து, உலகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளித்தனர். விளையாட்டுப் போட்டிகள் பாரிஸ் மற்றும் பக்கத்தில் உள்ள 16 நகரங்களிலும் நடந்தன. மொத்தம் 32 வகையான விளையாட்டுகளில் 206 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்து 115 வீரர்கள், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்றனர். அவர்களுடன் ஆயிரக்கணக்கான பயிற்சியாளர்கள், அலுவலர்கள், விளையாட்டுச் சங்கங்களின் நிர்வாகிகளும் பாரிசில் குவிந்தனர். இந்தியா சார்பில் 117 வீரர், வீராங்கனைகள் 16 வகையான விளையாட்டுகளில் பங்கேற்றனர்.

அவர்களுடன் 140 அலுவலர்களும் சென்றனர். இந்தியா தங்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பேட்மின்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவு, பளுதூக்குதல், ஈட்டி எறிதல், ஹாக்கி ஆகியவற்றில் ஏமாற்றமே மிஞ்சியது. துப்பாக்கிசுடுதலில் 3 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்க வேட்டையை தொடங்கிய இந்தியா அதன் பிறகு 4வது பதக்கத்துக்கு நீண்ட நெடிய காத்திருப்பை சந்தித்தது. அதன் பிறகு ஹாக்கியில் வெண்கலம், ஈட்டி எறிதலில் வெள்ளி கிடைக்க, இந்திய ரசிகர்கள் ஆறுதல் அடைந்தனர்.

மொத்தத்தில் இந்தியா நேற்று வரை துப்பாக்கிசுடுதலில் 3, மல்யுத்தம், ஹாக்கியில் தலா 1 என மொத்தம் 5 வெண்கலம், ஈட்டி எறிதலில் 1 வெள்ளியுடன் மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் அதிகபட்சமாக 7 பதக்கம் வென்றிருந்த நிலையில், இம்முறை இரட்டை இலக்கத்தை இலக்காகக் கொண்டு களமிறங்கியது இந்தியா. வினேஷ் போகத் மேல்முறையீட்டில் அவருக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் டோக்கியோ சாதனையை சமன் செய்து திருப்தி அடையலாம்.

தங்க வேட்டையில் அமெரிக்கா – சீனா இடையே கடும் இழுபறி நீடிப்பதால் முதலிடம் யாருக்கு என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா, ஜப்பான், கிரேட் பிரிட்டன், பிரான்ஸ் அணிகள் அடுத்த இடங்களில் உள்ளன. இந்நிலையில், கடைசி நாளான இன்று மகளிர் மாரத்தான், ஹேண்ட் பால், வாட்டர் போலோ, டிராக் சைக்கிளிங், மல்யுத்தம், நவீன பென்டத்லான், பளுதூக்குதல், வாலிபால் போட்டிகள் நடைபெற உள்ளன.

கடைசி ஆட்டமாக அமெரிக்கா – இத்தாலி மோதும் கூடைப்பந்து பைனல் இன்று இரவு நடைபெறும். தொடர்ந்து இரவு 12.30 மணிக்கு நிறைவு விழா கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன. வடக்கு பாரிசில் உள்ள பிரான்ஸ் விளையாட்டு அரங்கில் இந்த நிறைவு விழா அணிவகுப்பு, கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவின் முடிவில் ஒலிம்பிக் சுடர், ஒலிம்பிக் கொடி அடுத்து 2028ல் 34வது ஒலிம்பிக் போட்டியை நடத்த உள்ள அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயரிடம் ஒப்படைக்கப்படும்.

* பாரா ஒலிம்பிக்
ஒலிம்பிக் போட்டி இன்றுடன் முடியும் நிலையில் அடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிபிம்பிக் போட்டிகள் பாரிசில் நடைபெறும். இம்மாதம் 28ம் தேதி தொடங்கும் இப்போட்டி செப்.8ல் முடிவடையும். இதில் 23 விளையாட்டுகளில் 549 வகையான ஆட்டங்கள் நடத்தப்படும். இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 4400 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

Related posts

பெண் மருத்துவர்கள் இரவில் பணி செய்யக்கூடாது என கூற முடியாது : உச்சநீதிமன்றம்

பெண் மருத்துவர்கள் இரவில் பணி செய்யக்கூடாது என கூற முடியாது: உச்சநீதிமன்றம் கருத்து

முன்னோக்கி சிந்தித்தவர் பெரியார்: கமல்ஹாசன் பதிவு