‘ஓல்டு ஒயின் இன் நியூ பாட்டில்’: பிரதமர் மோடி குறித்து அமைச்சர் கலாய்

நாகர்கோவில்: ‘ஓல்டு ஒயின் இன் நியூ பாட்டில்’ என்று பிரதமர் மோடி பற்றி அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வு தேவையில்லை என்பதில் திமுக மிக உறுதியாக உள்ளது. இப்போது நமக்கு ஆதரவாக பல மாநிலங்கள் குரல் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதனை ஒரு ஆரோக்கியமான நிலையாக பார்க்கிறோம். ஒன்றிய அரசு இதனை புரிந்துகொண்டு நீட்டை ரத்து செய்ய வேண்டும். 12ம் வகுப்பு மார்க் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். பிரதமர் மோடியிடம் இருந்து எந்த மாற்றத்தையும் நாம் எதிர்பார்க்க முடியாது. ‘ஓல்டு ஒயின் இன் நியூ பாட்டில்’ என்பார்கள், பழைய ஒயின் புதிய பாட்டில் என்பது போன்று எல்லாமே பழைய ஆட்கள் தான் அமைச்சரவையில் உள்ளார்கள்.

இந்த நாட்டை பொருளாதாரத்தில் சீரழித்தவர்கள். கரன்சியை மாற்றினால் எல்லாவற்றையும் சரி செய்துவிட முடியும் என்று சொன்னவர்கள்தான் திரும்பவும் உள்ளார்கள். விலைவாசி உயர்வு, டோல்கேட் கட்டண உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்றவற்றில் எந்த மாற்றமும் நமது கண்ணுக்கு எட்டிய அளவில் நடைபெறவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். ஒன்றிய அரசின் அமைச்சரவையில் ஒரு இஸ்லாமியருக்கு கூட இடம் வழங்கப்படாதது தொடர்பாக அவர்கள்தான் பதில் கூற வேண்டும். சிறுபான்மையினருக்கு எதிராக எவ்வளவு வன்மத்தை, வெறுப்பை தேர்தல் நேரத்தில் அவர்கள் கட்டமைத்தார்கள் என்பது நமக்கு தெரியும். அதனை அரசியல் ஆதாயத்திற்காக, செய்தார்கள். இன்றைக்கு அதற்கு செயல்வடிவம் கொடுத்துள்ளார்கள். இது மிகப்பெரிய தவறாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மூலமாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

யானை நடமாட்டம்: கம்பம் அருகே சுருளி அருவியில் குளிக்க 2வது நாளாக தடை

சாதி வாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும்: மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் வலியுறுத்தல்