ஆளுநர் சென்ற சாலையில் முதியவர் தீக்குளித்து சாவு: மதுரையில் பரபரப்பு

மதுரை: மணிப்பூர் கவர்னர் இல.கணேசன் செல்லும் வழியில், திடீரென தீக்குளித்த முதியவர் பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மடீட்சியா அரங்கில் பாஜ மாநில நிர்வாகி ராம.ஸ்ரீனிவாசன் எழுதிய புத்தக வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில், கலந்துகொள்ள மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன், நேற்று காலை 11.20 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.

பின், விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகை சென்று தங்கினார். ஆளுநர் வருகையையொட்டி, விமான நிலையம் துவங்கி, அவர் தங்கும் விடுதி வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆளுநர் கான்வாய் செல்லும் வழியில் மதுரை கே.கே. நகர் அருகே வக்பு வாரிய கல்லூரி எதிரே, பகல் 12 மணியளவில் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் திடீரென, தன் உடலில் தின்னரை ஊற்றி தீக்குளித்தார். உடனடியாக அவரின் உடலில் தீ பரவிய நிலையில் அலறி துடித்தார்.

தொடர்ந்து, 90 சதவீத தீக்காயங்களுடன் மயங்கிய முதியவரை மீட்டு அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து அண்ணா நகர் போலீசார் நடத்திய விசாரணையில், தீக்குளித்து இறந்தவர் மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரத்தைச் சேர்ந்த கண்ணன் (50) எனவும், கடன் தொல்லையால் தீக்குளித்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம்: வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு