மெரினாவை சுற்றி பார்க்க வந்தபோது போலீஸ் வாகனம் மோதி மூதாட்டி பரிதாப பலி: காவலர் கைது

சென்னை: மெரினாவை சுற்றி பார்த்துவிட்டு காமராஜர் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி ஒருவர் போலீஸ் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மேரி (57). இவர் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர், கலைஞர் நினைவிடங்களை சுற்றி பார்க்க வந்துள்ளார். அங்கு, நினைவிடங்களை சுற்றி பார்த்துவிட்டு மெரினா காமராஜர் சாலையை கடக்க முயன்றார். அப்போது, கலங்கரை விளக்கம் பகுதியில் இருந்து தலைமை செயலகம் நோக்கி வந்த, மாநில உளவுத்துறைக்கு சொந்தமான வேன், மூதாட்டி மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்தார். தகவலறிந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் வேனை ஓட்டி வந்த காவலர் சத்தியமூர்த்தியை (28), கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் மெரினா காமராஜர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மற்றொரு சம்பவம்
தண்டையார்பேட்டை நாவலர் குடியிருப்பை சேர்ந்தவர் வர்ணமூர்த்தி (58). ரிக்‌ஷா ஓட்டுநரான இவர், நேற்று தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் உள்ள சாலையில் நடந்து சென்றபோது, எதிரே வந்த லாரி மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வர்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய திருவொற்றியூர் காலடிப்பேட்டையை சேர்ந்த லாரி டிரைவர் வெங்கடேசன் (44), நேற்று போலீசில் சரணடைந்தார். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு புதுச்சேரியில் தொடங்கியது

ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடிப்பு