பழைய பேச்சை எல்லாம் எடுத்துப்போட்டு இப்பிடி படுத்துறாய்ங்களேனு கட்சி மாறிய பெண்மணி கதறுவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘அம்மணி பேசிய பழைய பேச்சுகள் வைரலாகி வருதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடைக்கோடி சட்டமன்ற தொகுதியில் கதர்கட்சி சார்பில் போட்டியிட்டு 3வது முறையாக ஜெயிச்ச அம்மணி, திடீரென தாமரை கட்சியில் சேர்ந்தாங்க. இவுங்க கதர் கட்சியில் இருந்து விலகியதை, அந்த தொகுதி மட்டுமில்லாம மாவட்டம் முழுவதும் உள்ள கதர் கட்சிக்காரங்க பெரிய விழா போல கொண்டாடினாங்களாம். லட்டு விநியோகம், பட்டாசு வெடிப்பு என்று விழாக்கோலம்தானாம். இது மட்டுமில்லாம, அம்மணி கதர் கட்சியில இருந்தப்போ நடந்த மீட்டிங்கில், தாமரை கட்சி குறித்தும், அதன் தலைவர்கள் குறித்தும் பேசிய பேச்சுக்களை வைரலாக்கி வருகிறார்களாம். தாமரை கட்சி காலியான காய டப்பா என ஆரம்பிச்சு, தாமரை கட்சி குறித்து என்னவெல்லாம் பேசினாங்களோ, அதை அப்படியே எடிட் செய்யாமல் பரப்புறாங்களாம். இதைப்பாத்து அம்ணி ரொம்ப அப்செட்டாம். பழை பேச்சையெல்லாம் எடுத்துப்போட்டு இப்பிடி பரப்புறாய்ங்களேனு சொந்தபந்தத்துகிட்ட புலம்புறாங்களாம். இதுமட்டுமில்லாமல், தாமரையில் ஐக்கியமாகிய பின் அம்மணி, சொந்த மாவட்டத்துக்கு வரும் போது கருப்பு கொடி போராட்டத்துக்கும் கதர் கட்சிக்காரங்க தயாராகுறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாஜி மந்திரிக்கும், முக்கிய நிர்வாகிக்கும் மீண்டும் கோஷ்டி சண்டை உச்சக்கட்டத்துக்கு போயிருக்கிறதா சொல்றாங்களே..’’ என இழுத்தார் பீட்டர் மாமா.
‘‘கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, மந்திரியாக இருந்த தனக்கு சீட் வழங்காமல் முக்கிய நிர்வாகிக்கு தலைமை சீட் வழங்கியதால் கடும் அதிருப்தியில் இருந்தார். தனக்கு சீட் கிடைக்காததற்கு மாவட்ட முக்கிய நிர்வாகியே காரணமென தனது ஆதரவாளர்களிடம் கூறி வந்தார். இதனால் கட்சி நடவடிக்கைகளிலும், போதிய ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார். அதிருப்தியில் இருந்த மாஜிக்கு அமைப்பு செயலாளர் பதவி வழங்கி கட்சி மேலிடம் சரிக்கட்டியது. இதன்பிறகே இவர் மீண்டும் இலைக்கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டார். ஆனால், கொஞ்ச காலம் அமைதியாக சென்ற இருவருக்கும் மீண்டும் பனிப்போர் துவங்கியுள்ளது. முக்கிய நிகழ்வுகளில் மாஜி மந்திரி ஆதரவாளர்கள் அடிக்கும் போஸ்டரில் முக்கிய நிர்வாகியை புறக்கணிக்கின்றனர். முக்கிய நிர்வாகி ஆதரவாளர்கள் போஸ்டரில் மாஜி மந்திரியை புறக்கணித்து விடுகின்றனர். மேலும், இருவரும் தனித்தனியே நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனராம். ஏற்கனவே, ஆங்காங்கே உடைசலை சரி பண்ணிக்கிட்டிருக்கிற நேரத்துல, இது வேறயா என இலைக்கட்சியின் பொதுவான தொண்டர்கள் தலையில் அடிச்சிக்கிறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஓட்டல் உரிமையாளரின் மனைவியை சீண்டிப்பார்த்த காக்கி பற்றி எஸ்பி வரை புகார் போயிருக்காமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘அல்வா மாவட்டத்தில பணியாற்றும் காக்கி ஒருவருக்கு இதே மாவட்டத்தில் சினிமா படத்துடன் தொடர்புடைய ஊரில் டூட்டி போட்டனராம். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிடச் சென்றவருக்கு ஓட்டல் உரிமையாளரின் மனைவி மீது ஒரு கண் விழுந்துள்ளது. சமீபத்தில் அந்தப் பெண் ஓட்டல் பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட்ட போது, இந்த காவல் தெய்வம் அவரை பின் தொடர்ந்ததாம். நைசாக அவரிடம் பேச்சு கொடுத்து செல்போன் எண்ணை கேட்டு அதட்டினாராம். விவரம் புரிந்து கொண்ட அந்தப் பெண், தனது கணவரின் எண்ணை காவல் தெய்வத்திடம் கொடுத்து விட்டு விவரத்தை அவரிடமும் பக்குவமா கூறினாராம். நம்பர் கிடைத்துப் போன ஆசையில் போனை சுழற்றி பேச்சு கொடுக்க, மறுமுனையில் பெண்ணின் கணவர் பேசினாராம். இதனால் அந்த காவல் தெய்வத்திற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாம். போன் நம்பர் கிடைத்தும் பேச முடியாத விரக்தியில் கணவரையே மிரட்டிப் பார்த்தாராம். அசைந்து கொடுக்காத அவர் இணைப்பை துண்டித்து விட்டாராம். ஆனாலும் தொடர்ந்த இம்சை தாங்காத அந்த ஓட்டல் உரிமையாளர் விஷயத்தை எஸ்பி வரை கொண்டு சென்று, நடவடிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கிறாராம். அட நாராயணா……ஊரை காக்க வேண்டியது…. இப்படி அசடு வழியுதே….என காக்கிகள் வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு ஓடிக் கொண்டிருக்கு..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சொந்த தொகுதியை முதல்ல கன்பார்ம் பண்ண போறாராமே..’’ என்று பூடகமாக கேட்டார் பீட்டர் மாமா.
‘‘பார்லிமென்ட் எலக்சன்ல மெகா கூட்டணி அமைப்ேபன்னு சேலத்துக்காரரு பல மாசமா சொல்லிக்கிட்ேட இருக்காரு. மாம்பழத்தையும், முரசையும் குறிவச்சு தான், அவரது மூவ்மென்ட் எல்லாமே இருக்கு என்பது ஊரறிஞ்ச விஷயம். இப்படிப்பட்ட நிலையில் தொகுதி பிரிப்பதில்தான் இப்போது கடும் சிக்கல் வந்திருக்காம். இது மத்த மாவட்டங்களுக்கு வந்தா பரவாயில்லை. அவரது சொந்த மாவட்டத்திலேயே பெரும் தலைவலியாக மாறி இருக்காம். அதாவது மாங்கனிக்கு பேமசான அவரது சொந்த தொகுதியை மாம்பழ கட்சி கேட்குதாம். இங்ேக டாக்டருக்கு மிகவும் நெருக்கமான மாஜி எம்எல்ஏ ஒருத்தரு, தனக்கு சீட்டு வேணும்னு ஒத்தக்காலில் நிற்கிறாராம். அதேநேரத்தில் முரசு கட்சியும் மாம்பழ ெதாகுதி எங்களுக்கே வேணும் என்று ஒரு ஆப்ஷனை முன் வச்சிருக்காம். இங்கே மைத்துனர் நின்று கணிசமான ஓட்டு வாங்கியதால் அவுகளும் தொகுதியை குறி வச்சிருக்காங்களாம். ஆனா, சேலத்துக்காரரோ, சிட்டிங் எம்எல்ஏ ஒருவரின் ரிலேஷனுக்கு தான் சீட்டு என்று ஏற்கனவே பிராமிஸ் பண்ணி இருக்காராம். இப்போ இடியாப்ப சிக்கலால் யாருக்கு மாம்பழ தொகுதி ஒதுக்கப்படும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்காம். இதனால் முதலில் சொந்த தொகுதியை கன்பார்ம் பண்ணிக்கிட்டு அப்புறம் மத்த தொகுதிகளை ஒதுக்க பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற மைன்ட் செட்டில் சேலத்துக்காரர் இருப்பதாக அடிப்பொடிகள் சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது