உளுந்தூர்பேட்டை அருகே நள்ளிரவில் தாய், குழந்தைகள் உட்பட 3 பேர் தீயில் கருகி பலி: காப்பாற்ற முயன்ற முதியவரும் சாவு

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே மனநலம் பாதித்த தாய் தீக்குளித்து தற்கொலைக்கு செய்துகொண்டபோது அதே அறையில் தூங்கிக்ெகாண்டிருந்த 2 குழந்தைகளும் தீயில் கருகி பலியானார்கள். இவர்களை காப்பாற்றச்சென்ற முதியவரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தார். ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நத்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுரங்கம் (75). இவர் இதே கிராமத்தில் உரக்கடை மற்றும் சிமெண்ட் வியாபாரம் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்து வந்தார். இவரது 4வது மகள் திரவியம் (42) என்பவரை கிளாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மதுரை வீரன் என்பவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார். இந்த தம்பதிக்கு ரியாஷினி (4), விஜயகுமாரி (3) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த திரவியம் தனது தாய் வீடான நத்தாமூர் கிராமத்தில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று திரவியம் திடீரென தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி வெளியே செல்ல முயன்றார். இதனை பார்த்த பெற்றோர் அவரை தடுத்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் ஒரு அறையில் தனது இரண்டு குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த திரவியம் நள்ளிரவு நேரத்தில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் பலத்த தீக்காயம் அடைந்து மயங்கி கீழே விழுந்து இறந்தார். அறை முழுவதும் தீ பரவியதன் காரணமாக அதே அறையில் தூங்கிக்கொண்டிருந்த இரண்டு குழந்தைகளும் தீயில் கருகி அலறினார்கள். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் படுத்திருந்த பொன்னுரங்கம் சென்று அவர்களை காப்பாற்ற முயற்சி செய்தார். அதற்குள் அவர்கள் உடல் கருகி இறந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது தீயினால் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக பொன்னுரங்கத்திற்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து அவரும் இறந்தார். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு திரண்ட அக்கம்பக்கத்தினர்

திருநாவலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி மகேஷ் மற்றும் போலீசார் உளுந்தூர்பேட்டை தீயணைப்புத்துறையினர் உதவியுடன் ஜேசிபி இயந்திரம் கொண்டு அறையின் சுவரை உடைத்து கருகிய நிலையில் கிடந்த மூன்று பேரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தின் போது மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த உறவினர் விஜயகுமார் (53), இதே வீட்டில் மற்றொரு அறையில் படுத்து இருந்த பொன்னுரங்கத்தின் மகன் வழி பேரன் விவேக் மிட்டல் (4) ஆகிய இரண்டு பேரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து திருநாவலூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவு நேரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி

அக்-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!