பள்ளிக்கரணை பகுதிகளில் வெள்ள பாதிப்பை தடுக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை விரிவாக்கம்

*புதிய பாலம் கட்டப்பட்ட பிறகு பழைய பாலத்தை இடிக்க முடிவு

சென்னை : பருவ மழை தொடங்க உள்ள நிலையில், பள்ளிக்கரணை பகுதியில் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில், ஒக்கியம் மடுவு நீர்வழி பாதையை விரிவாக்கம் செய்யும் பணி மற்றும் 5 வழிச்சாலை பாலம் கட்டும் பணியை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. தென்சென்னைக்கு உட்பட்ட பள்ளிக்கரணை, வேளச்சேரி, மேடவாக்கம், மடிப்பாக்கம், புழுதிவாக்கம், கீழ்கட்டளை உள்ளிட்ட பகுதிகள் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு, நீர்வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் முக்கிய காரணமாகும்.

இதேபோல், மேற்கண்ட பகுதிகளில் உள்ள ஏரிகள் முறையாக தூர்வாரி சீரமைக்கப்படாததால், போதிய மழைநீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. பல ஏரிகளின் கரைப்பகுதி வலுவிழந்து காணப்படுவதால், மழைக்காலங்களில் உடைப்பு ஏற்பட்டு, சுற்றுப் பகுதி வீடுகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
குறிப்பாக, பள்ளிக்கரணை ஏரி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளதால், மழைக்காலங்களில் போதிய நீரை சேமிக்க முடியாமல், உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. அவ்வாறு வெளியேற்றப்படும் உபரிநீர், ஒக்கியம் மடுவு வழியாக கடலை நோக்கி சென்றடையும்.

பள்ளிக்கரணை மற்றும் வேளச்சேரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், நேரடியாக கடலுக்கு எந்த கால்வாயும் இல்லை. இதனால் பல கிலோ மீட்டர் பயணிக்கும் வெள்ளம், இறுதியாக முட்டுக்காடு வரை செல்ல வேண்டியுள்ளது. இதனால் இந்த கால்வாய் அனைத்தையும் அரசு இப்போது மிகுந்த அக்கறையுடன் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

ஏனெனில் தென்சென்னை வெள்ளத்தில் இருந்து தப்பிக்க இந்த கால்வாய் மிக முக்கியம் ஆகும். கடந்த 2023ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் மழை வெள்ளம் ஏற்பட்ட போது, ஒக்கியம் மடுவு பாலத்தின் கீழ் வெள்ளநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஏற்கனவே நிரம்பிய ஏரிகள் மீது தொடர்ந்து 36 மணிநேரம் பெய்த மழை, கற்பனைக்கு எட்டாத அளவிற்கு சிக்கலை ஏற்படுத்தியது.

கீழ்கட்டளை முதல் பள்ளிக்கரணை நாராணயபுரம் ஏரி வரை உள்ள கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் மிகவும் குறுகிய அளவில் உள்ளதால், அதிகப்படியான தண்ணீர் வேளச்சேரி, பள்ளக்கரணை, மடிப்பாக்கம், பெரும்பாக்கம், பெருங்குடி, துரைப்பாக்கம் பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்தது. இந்த வெள்ளம் கடந்த ஆண்டு மோசமான பாதிப்பு ஏற்பட்டுத்த இன்னொரு காரணமும் இருக்கிறது. அதுதாடின ஒக்கியம் மடுவு பாலம். ஒக்கியம் மடுவு பாலத்தில் தண்ணீர் வெளியேற முடியாத அளவிற்கு பாதை மிக சிறிய அளவில் இருந்தது. இதுவும் தண்ணீரின் வேகத்திற்கு ஏற்ப செல்ல முடியாததால், தண்ணீர் தேங்கி வெள்ளமாக மாறியது.

அதிக மழையை தாங்கும் திறன் இல்லாததும், பாலத்தில் நீர்வழிப்பாதை நீளமும், பாலத்தின் உயரம் குறைவாக இருந்ததே இதற்கு காரணம் என கண்டறிந்த அதிகாரிகள், போர்க்கால அடிப்படையில் ஒக்கியம் மடுவு பாலத்தின் நீர்வழிப்பாதையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஒக்கியம் மடுவு பாலத்தின் கீழ், புற பகுதியை சரிசெய்வதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் அண்மையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஒக்கியம் மடுவு பாலத்தின் நீர்வழிப்பாதை 80 மீட்டரில் இருந்து 200 மீட்டர் நீளத்திற்கும், பாலத்தின் உயரத்தை 1.5 மீட்டர் அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஒக்கியம் மடுவு நீர்வழி பாதையை விரிவாக்கம் செய்யும் பணி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி, நீர்வழி பாதை விரிவாக்கம் மற்றும் 5 வழிச்சாலை பாலம் கட்டும் பணியை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஒக்கியம் மடுவு பாலத்தின் 2 பக்கங்களிலும் மேற்கொண்டு 2 வழிச்சாலைக்கான அடித்தள பணிகள் நிறைவடைந்திருக்கிறது. நீர்வழி பாதையை சுத்தம் செய்யும் பணியையும் மெட்ரோ ரயில் நிறுவனம் முழுமையாக சுத்தம் செய்திருக்கிறது. பருவமழை காலத்தில் வெள்ளத்தை சமாளிக்க 5 நீர்க்குழாய்களின் கொள்ளளவு மேம்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போது இந்த பாலம் பருவமழையை சமாளிக்க தயார் நிலையில் உள்ளது என்றும், பருவமழைக்கு பின்னர் மீதமுள்ள சாலை பாலப்பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னை மெட்ரோ ரயில், நீர்வளத் துறையின் கோரிக்கைக்கு ஏற்ப, ஓக்கியம் மடுவு நீர்வழி பாதையை விரிவாக்கம் செய்யும் பணி மற்றும் 5 வழிச்சாலை பாலம் கட்டும் பணியை மேற்கொண்டது. பள்ளிக்கரணை ஏரிப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருக்க, நீர்வழி பாதையை விரிவாக்கம் செய்துள்ளோம். அங்கு இருக்கும் பழைய பாலம், புதிய பாலம் கட்டப்பட்ட பிறகு இடிக்கப்படும்.

தற்போதைய ஒக்கியம் மடுவு பாலத்தில் நீர்வழிப்பாதை தற்போது சுமார் 80 மீட்டர் நீளமும், அதன் உயரமும் குறைவாகவே உள்ளது. இதனை சரிசெய்யும் பொருட்டு தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நீர்வழிப்பாதையை 200 மீட்டர் நீளத்திற்கும், கூடுதலாக 1.5 மீட்டர் உயர இடைவெளியுடனும் அதிகரிக்கும் பணி நடைபெற்றுள்ளது. மேலும் இருபக்கங்களிலும் 3 கூடுதல் வழிச்சாலைகளுக்கான இடவசதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் 5 வழிச்சாலைகளாக விரிவுபடுத்தப்படும்.

2 பக்கங்களிலும் இரு வழிசாலைக்கான அடித்தள வேலைகள் நிறைவடைந்துள்ளன. ஒக்கியம் மடுவு நீர்வழியை சுத்தம் செய்வது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பாக இருந்தது, தற்போது அதுவும் முடிவடைந்துள்ளது. மேலும் பருவமழை காலத்தில் அதிக நீர்வெள்ளத்தை சமாளிக்க 5 நீர்க்குழாய்களின் கொள்ளளவு மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, வரவிருக்கும் பருவமழையை சமாளிக்க தயார் நிலையில் உள்ளது. பருவமழைக்கு பிறகு மீதமுள்ள சாலைப் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படும்,’’ என்றனர்.

Related posts

குழந்தைகளின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்ற தீர்ப்பு ரத்து: உச்சநீதிமன்றம் உத்தரவு

முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது: பொதுப்பிரிவுக்கு நாளை கலந்தாய்வு

திருப்பதி லட்டு விவகாரம்; ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டை பாஜக முற்றுகை!