ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.41 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு மேட்டூர் அணை நீர்மட்டம் 103.13 அடியாக உயர்ந்தது: ஆடிப்பெருக்கு விழாவுக்கு இன்று தண்ணீர் திறப்பு, 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பால், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1 லட்சத்து 41 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அதே போல், மேட்டூர் அணைக்கு 1 லட்சத்து 23,184 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், நீர்மட்டம் 103 அடியை தாண்டியுள்ளது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 12 மாவட்டங்களில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா, கேரளா மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பி உள்ளன. அந்த அணைகளில் இருந்து விநாடிக்கு 1.66 லட்சம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில், நேற்று முன்தினம் இரவு 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் கனஅடியாக இருந்தது, நேற்று இரவு 8 மணியளவில் விநாடிக்கு 1 லட்சத்து 41 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.

இதனால், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை நீடிக்கிறது. ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி கரையோரப் பகுதிகளில், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதே போல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் இரவு 68,032 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று இரவு 8 மணியளவில் விநாடிக்கு 1 லட்சத்து 23,184 கனஅடியாக அதிகரித்தது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி 99.11 அடியாக இருந்த நீர்மட்டம், இரவு 8 மணியளவில் 103.13 அடியாக உயர்ந்தது. நீர்மட்டம் 100 அடியை தாண்டியதை தொடர்ந்து, அணையின் இடது கரையில் நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித் துறையினர் சிறப்பு பூஜை நடத்தி, காவிரியில் மலர் தூவி வணங்கினர்.

கடந்த ஆண்டு ஜூன் 17ம் தேதி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.29 அடியாக இருந்தது. மறுநாள் 18ம் தேதி காலை 99.64 அடியாக சரிந்தது. அதன் பிறகு, தற்போது மீண்டும் 103 அடியை எட்டியுள்ளதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அணைக்கு வரும் நீரின் அளவு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் அதிகரித்துள்ளதால், டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அடிப்பாலாறு, செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி பகுதிகளில் காவிரி கரைகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும் படியும், காவிரியில் படகு ஓட்டவோ, மீனவர்கள் மீன் பிடிக்கவோ செல்லக்கூடாது. காவிரி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ யாரும் செல்லக்கூடாது என்று ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடும் வகையில், சேலம், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களுக்கு இன்று (28ம் தேதி) முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை, 7 நாட்களுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* ஓரிருநாளில் பாசனத்துக்கு நீர் திறப்பு
மேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியுள்ள நிலையில் தொடர்ந்து 1 லட்சம் கனஅடிக்கும் அதிகமாக தண்ணீர் வருவதால் இன்னும் ஓரிரு நாளில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து டெல்டா மாவட்டங்களில் கால்வாய்களை தூர்வாரும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்