வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே, வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர், அலறியடித்து அங்கும், இங்கும் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 60 சதவீத தீக்காயங்களுடன் அவர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி ஊராட்சி கோட்டக்கரை நேதாஜி நகரைச் சேர்ந்தவர்கள் தினகரன் – கல்யாணி தம்பதி. இவர்கள் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு பர்மாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து தஞ்சம் புகுந்தனர்.

அதற்கான ஆதாரங்களை கல்யாணி இதுவரையில் பாதுகாத்து வருகிறார். கணவனை இழந்த கல்யாணி தனது 2 மகன்களுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கல்யாணியின் வீட்டின் பின்புறம் சிலர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டியுள்ளனர். இதில் நடைபாதைக்கான இடத்தை கொடுக்குமாறு அவர்கள் கல்யாணியை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பின்பு அதிகாரிகளிடம் புகார் மனுவும் வழங்கப்பட்டதாகவும், 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வட்டாட்சியர், கல்யாணியின் இடத்தை நேரடியாக ஆய்வு செய்து அந்த இடம் பட்டா இடம் என்பதால், நீதிமன்றத்தை நாடி முறையாக தீர்வு பெறுமாறு இருதரப்புக்கும் எழுத்துப்பூர்வமாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து கல்யாணிக்கு வருவாய்த்துறை சார்பில், இந்த இடம் ஆக்கிரமிப்பு இடம் எனக்கூறி கடிதம் கொடுத்து வீட்டை அகற்ற முடிவு செய்துள்ளனர். இதற்காக நேற்று காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மின்வாரிய நிர்வாகிகள் பொக்லைனுடன் அங்கு வந்து வீட்டை இடிக்க தயாராகினர். அப்போது ஒரு வாரம் அவகாசம் தாருங்கள் என அதிகாரிகளிடம் கல்யாணி கெஞ்சியுள்ளார். ஆனால் மின்வாரியத்துறையினர் அதிரடியாக வீட்டின் மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கல்யாணியின் இளைய மகன் ராஜ்குமார்(28), அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து வீட்டை பூட்டிக்கொண்டு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குத்தானெ தீ வைத்துக்கொண்டார். பின்னர் தீக்குளித்தவாறு அவர் வீட்டைவிட்டு வெளியேறி அதிகாரிகள் முன்னிலையில் தெருக்களில் அலறி ஓடினார்.

அப்போது உடனே சுதாரித்துக்கொண்ட காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் தீயை அணைத்து ராஜ்குமாரை மீட்டு குமிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். 60 சதவீதம் தீக்காயம் அடைந்த நிலையில், அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜ்குமார் தீக்குளித்தபடி தெருவில் ஓடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை