ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள பிரதமர் செல்பி பூத் செலவை கூறிய அதிகாரி டிரான்ஸ்பர்: தகவல் வெளியிட்டதால் தூக்கி அடிக்கப்பட்டார்

நாக்பூர்: ரயில் நிலையங்களில் பிரதமர் மோடியின் செல்பி பூத் அமைப்பதற்கான செலவு விவரங்களை வெளியிட்ட மத்திய ரயில்வே அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் பயணிகள் செல்பி எடுத்துக் கொள்ள ரயில் நிலையங்களில் செல்பி பூத்கள் அமைக்க எவ்வளவு செலவு ஆனது என அமராவதியை சேர்ந்த சமூக ஆர்வலர் அஜய் போஸ் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்திருந்தார். அதற்கு மத்திய ரயில்வே அளித்த பதிலில், தற்காலிக செல்பி பூத் அமைக்க தலா ரூ.1.25 லட்சமும், நிரந்தர பூத் அமைக்க ரூ.6.25 லட்சமும் செலவானதாக கூறப்பட்டுள்ளது.

இதுபோல 187 செல்பி பூத் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 100 பூத்கள் வடக்கு ரயில்வேயில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இது அரசியல் ரீதியாக பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆர்டிஐ மனுவிற்கு செல்பி பூத் செலவு கணக்குகளை வெளியிட்ட மத்திய ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி (பிஆர்ஓ) சிவ்ராஜ் மனாஸ்புரே கடந்த மாதம் 29ம் தேதி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவரது இடமாற்றத்திற்கு எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை. மனாஸ்புரேவுக்கு பதிலாக ஸ்வப்னில் நிலா நியமிக்கப்பட்டுள்ளார். மனாஸ்புரே கடந்த ஆண்டு மே மாதம் தான் மத்திய ரயில்வே தலைமை பிஆர்ஓவாக பொறுப்பேற்றார். இவரது 2 ஆண்டு பதவிக்காலம் முடியும் முன்பாகவே, செல்பி பூத் செலவு கணக்கை வெளியிட்டதால் தூக்கி அடிக்கப்பட்டுள்ளார். ஆனால் இது குறித்து மத்திய ரயில்வே அதிகாரிகள் யாரும் எந்த விளக்கமும் தரவில்லை. இது மேலிட முடிவு என்பதால் எதுவும் சொல்ல முடியாது என புதிய பிஆர்ஓ நிலா கூறி உள்ளார்.

* சிறந்த பணிக்கு இடமாற்றம் பரிசு
ஆர்டிஐ மனு செய்த போஸ் கூறுகையில், ‘‘இந்த விவகாரம் தொடர்பாக தெற்கு, வடக்கு உள்ளிட்ட 5 ரயில்வே மண்டலத்திலும் மனு தாக்கல் செய்திருந்தேன். ஆனால் மத்திய ரயில்வே தவிர செலவு கணக்கை வேறு யாரும் தரவில்லை’’ என்றார். டிரான்ஸ்பர் செய்யப்பட்ட சிவ்ராஜ் மனாஸ்புரே, கடந்த 3 வாரங்களுக்கு முன்புதான் வருவாயை பெருக்கியது, திருட்டு தடுப்பு மற்றும் டிக்கெட் இன்றி பயணம் செய்வோரை கண்டறிதல் உள்ளிட்ட சிறந்த பணிக்காக ஒன்றிய ரயில்வே அமைச்சர் வைஷ்ணவி அஸ்வினியிடம் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை