‘அதிகாரிகள் வருவார் பின்னே… மேட்டர் வெடிக்குது முன்னே…’ பட்டாசு ஆலை ஆய்வு தகவலை‘பத்த வைக்கும்’ வாட்ஸ்அப் குழு: ஆடியோ வைரலால் அதிர்ச்சி

சாத்தூர்: பட்டாசு ஆலைக்கு அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் தகவலை, முன்கூட்டியே தெரிவிக்கும் வாட்ஸ்அப் குழுவின் உரையாடல் ஆடியோ வைரலாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. விதிமீறல் உள்ளிட்ட காரணங்களால் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி வெடி விபத்து நடந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இதை தடுப்பதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய தனிக்குழு உருவாக்கப்பட்டு பட்டாசு ஆலைகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிக ரத்து போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். விதிமீறி தயாரிக்கப்பட்ட பட்டாசுகள், வெடி மருந்துகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கின்றனர். இதனால் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பது குறைந்து வருகிறது.

அதிகாரிகளின் சோதனைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் தனியார் பட்டாசு ஆலையை குத்தகைக்கு எடுத்துள்ள நபர்கள் தனியாக ஒரு வாட்ஸ்அப் குழு உருவாக்கியுள்ளனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட குத்தகைதாரர்கள் இணைந்துள்ளனர். இந்த குழுவில் அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் தகவல்கள் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படுகின்றன. இவ்வாறு வேவு பார்ப்பதற்காகவே குத்தகைதாரர்கள் சார்பில் தனியாக ஆட்கள் நியமித்துள்ளது குழுவில் நடக்கும் உரையாடல் மூலம் தெரிய வருகிறது.

அப்டேட் கிடைத்தவுடன் உஷாராகும் குத்தகைதாரர்கள், அதிகாரிகள் வரும் நேரத்தில் விதிமீறல் எதுவும் இல்லாதவாறு பார்த்துக் கொள்கின்றனர். இதனிடையே இந்த குழுவில் உள்ள அப்டேட் ஆடியோ வெளியாகி வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பல்வேறு நபர்கள் பேசியுள்ள சிறு சிறு ஆடியோக்களில், அதிகாரிகள் வரும் நேரம், வரக்கூடிய கார், எங்கு வருகிறார்கள் உள்ளிட்ட தகவல்கள் கூறப்படுகின்றன.

இது அதிகாரிகள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நேரத்தில் விதிமீறல் காரணமாக விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அப்பாவி தொழிலாளர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

அன்சிகா மார்ட் நிறுவன ரூ.30 கோடி மோசடியில் தொடர்புடைய மேலும் 2 பேர் கைது!!

கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்கா குடியிருப்பு வளாகத்தில் பெண் பணியாளர்கள் தங்கும் வகையில் TNIHPL – T.P Solar Ltd இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

TNPSC குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை!