ஒடிசாவில் 24 ஆண்டுகள் 91 நாட்கள் தொடர்ந்து முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக்கின் சாதனை பயணம் முடிவுக்கு வந்தது!!

புவனேஷ்வர்: ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் பாஜ 80 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றன. அதேபோல் ஆளும் கட்சியான பிஜூ ஜனதா தளம் 49 இடங்களில் முன்னிலை பெற்று 2வது இடத்தில் உள்ளன. இதனால் 24 ஆண்டுகளாக அம்மாநில முதல்வராக இருந்துவரும் நவீன் பட்நாயக் ஆட்சியை இழக்கும்நிலை ஏற்பட்டுள்ளது.ஒடிசாவில் தற்போது பிஜூ ஜனதா தளத்தின் தலைவர் நவீன் பட்நாயக் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தின் சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் மக்களவை தேர்தலுடன் மொத்தம் 147 சட்டபேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், ஆளும் பிஜூ ஜனதா தளம், பாஜ, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிட்டதால் மும்முனை போட்டி நிலவியது.4 கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்தல் மே 13ம் தேதி 28 தொகுதிகளுக்கும், மே 20ம் தேதி 35 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மே 25ம் தேதி நடைபெற்ற 3ம் கட்டதேர்தலில் 42 தொகுதிகளில் வாக்குப்பதிவுகள் நடைபெற்றன. கடைசி மற்றும் இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி 42 தொகுதிகளில் நடைபெற்றது. மொத்தம் 63.46 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டன. அதன்படி,பாஜ 80 தொகுதிகளிலும், பிஜூ ஜனதா தளம் 49 மற்றும் காங்கிரஸ் 14 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகின்றன.இதன் மூலம் பாஜக அங்கு ஆட்சி அமைக்கிறது. அத்துடன், ஒடிசாவில் 24 ஆண்டுகள் 91 நாட்கள் தொடர்ந்து முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக்கின் சாதனை பயணம் முடிவுக்கு வந்தது. அதிக காலம் பதவியில் இருந்த முதலமைச்சர்கள் வரிசையில் 2வது இடத்தில் உள்ள நவீன், இம்முறை வென்றிருந்தால் 74 நாட்களில் முதலிடத்தை எட்டியிருப்பார். 24 ஆண்டுகள் 165 நாட்கள் முதலமைச்சராக இருந்து சிக்கிம் முன்னாள் முதலமைச்சர் பவன் குமார் சாம்ளிங் முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்

நீட் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது