ஒடிசாவின் மாநிலத்தின் 15வது முதல்வராக பதவியேற்றார் மோகன் சரண் மாஜி: ஆளுநர் ரகுபர் தாஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

ஒடிசா: ஒடிசா மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் நடந்த சட்டப் பேரவை தேர்தலில், தனிப் பெரும்பான்மையுடன் முதல் முறையாக பாஜக ஆட்சியை பிடித்தது. கடந்த 24 ஆண்டுகளாக அந்த மாநில முதல்வராக இருந்த நவீன் பட்நாயக் தனது பதவியை ராஜிநாமா செய்தார். புதிய முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று புவனேஸ்வரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒடிசாவின் புதிய முதல்வராக மோகன் சரண் மஜ்ஹி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கே.வி.சிங் தேவ், பிரவதி பரிதா ஆகிய இருவரும் துணை முதல்வர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சட்டப்பேரவை பாஜக குழு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸை சந்தித்து மோகன் சரண் மஜ்ஹி ஆட்சியமைக்க உரிமை கோரினார். தொடர்ந்து, ஆளுநர் அவருக்கு ஆட்சியமைக்க முறைப்படி அழைப்பு விடுத்தார். அதன்படி புவனேஸ்வரத்தில் உள்ள ஜனதா மைதானத்தில் ஒடிசாவின் 15வது முதல்வராக மோகன் சரண் மஜ்ஹி பதவியேற்றார். அவருடன் 2 துணை முதல்வர்கள், அமைச்சர்களும் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் ரகுபர் தாஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கற்றுள்ளார்.

மேலும் ஒன்றிய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக, முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கை மரியாதை நிமித்தமாக முதல்வராக தேர்வு செய்யப்பட்ட மோகன் சரண் மஜ்ஹி மற்றும் துணை முதல்வர்கள் சந்தித்தனர். பின்னர், ‘உத்கலாமணி’ கோபபந்து தாஸ் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஜனதா மைதானத்தில் நடைபெறும் விழாவில் விவிஐபிகள் தவிர சுமார் 30,000 பேர் கலந்து கொண்டுள்ளனர். அதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Related posts

தொடர் மழையால் அடுத்தடுத்து உடையும் பாலங்கள்

நான் முதல்வன் திட்டத்தில் ஒன்றிய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வுசெய்ய டெண்டர்!

கடலூர் அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை: 3 தனிப்படைகள் அமைப்பு