ஒடிசா பேரவை தேர்தலில் பிஜேடி கட்சி தோல்வி எதிரொலி தீவிர அரசியலில் இருந்து விலகினார் வி.கே.பாண்டியன்: கட்சியினர் மன்னிக்க வேண்டுகோள்

புவனேஷ்வர்: ஒடிசாவில் 24 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த பிஜூ ஜனதா தளத்தின் படுதோல்விக்கு நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரான வி.கே.பாண்டியன்தான் காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக வி.கே.பாண்டியன் நேற்று அறிவித்தார். இதுதொடர்பாக அவர் வௌியிட்டுள்ள காணொலி செய்தியில், “தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த நான் மக்களுக்கு சேவை செய்யவே ஐஏஎஸ் படித்து வெற்றி பெற்று பணியில் சேர்ந்தேன். நவீன் பட்நாயக்கால் கவரப்பட்டு, அவருக்கு உதவி செய்யவே ஐஏஎஸ் பதவியில் இருந்து தீவிர அரசியலுக்கு வந்தேன். அரசியல் தொடர்பான பதவிகளில் எனக்கு எந்த விருப்பமும் இல்லை.

இப்போது தீவிர அரசியல் பயணத்தில் இருந்து விடுபட விரும்புகிறேன். என் அரசியல் செயல்பாடுகளின்போது நான் யாரையாவது புண்படுத்தியிருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். தேர்தல் தோல்விக்கு நான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அதற்காக பிஜூ ஜனதா தள கட்சியினரிடமும், அதன் தொண்டர்களிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். எனக்கு வாய்ப்பளித்த, ஒத்துழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். எப்போதும் ஒடிசா மக்களும், என் குருவான பிஜூ ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக்கும் என் மூச்சில் கலந்திருப்பர். நான் ஐஏஎஸ் ஆவதற்கு முன் என் குடும்பத்திற்கு இருந்த பூர்வீக சொத்து மட்டுமே இப்போதும் என்னிடம் இருக்கிறது.” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். ஒடிசாவில் தேர்தல் பிரசாரத்தின் போது வி.கே.பாண்டியனை குறி வைத்து பாஜ பிரசாரம் செய்தது. ஆட்சிப்பொறுப்பை தமிழரிடமா ஒப்படைக்கப்போகிறீர்கள் என்று பிரதமர் மோடி பிரசாரம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

Related posts

லெபனானுக்கு ரஷ்யா ஆதரவு.. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கொல்லப் போவதாக ஈரான் மிரட்டல்!!

அரசியல் கட்சி தொடங்கினார் பிரசாந்த் கிஷோர்..!!

கடிகாரம் சின்னம்: உச்சநீதிமன்றத்தை நாடிய சரத் பவார்