வைகுண்ட ஏகாதசியையொட்டி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் வழியாக திரளான பக்தர்கள் தரிசனம்: தங்க ரதத்தில் மலையப்பசுவாமி வீதி உலா, கொட்டும் பனியிலும் லட்சக்கணக்கில் குவிந்தனர்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி வேதமந்திரங்கள் முழங்க சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போதுகொட்டும் பனியிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதையடுத்து தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி நேற்றுமுன்தினம் முன்தினம் முதலே திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

நேற்று நள்ளிரவு ஜீயர்கள் முன்னிலையில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆகம முறைப்படி சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து அதிகாலை 1.40 மணிக்கு மூலவர் கருவறையை சுற்றியுள்ள சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அப்போது திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என வைகுண்டத்திற்கே கேட்கும்படி விண்ணதிர பக்தி முழக்கமிட்டனர். தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து காலை 5.15 மணியில் இருந்து ஏழுமலையான் கோயிலில் தரிசன செய்வதற்காக டிக்கெட் பெற்ற பக்தர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு 45 நிமிடம் முன்பாக அனுமதிக்கப்பட்டு சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து 9 மணியளவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி 32 அடி உயரம் கொண்ட தங்க ரதத்தில் திருவீதி உலா வந்தது. பெண்கள் வடம் பிடித்து இழுக்க 4 மாடவீதிகளில் பக்தர்களின் ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற பக்தி முழக்கத்திற்கு இடையே வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7 மணிக்கு ராப்பத்து உற்சவம் நடந்தது. இந்த உற்சவம் தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறும். இரவு 12 மணி வரை தொடர்ந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.

வைகுண்ட துவாதசியையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து ஜனவரி 1ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். 28ம் தேதி வரை டிக்கெட் விநியோகம் திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனத்திற்காக ஆதார் அட்டை மூலம் இலவச சர்வ தரிசன் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 28ம் தேதி வரை டோக்கன்கள் பக்தர்கள் பெற்று சென்ற நிலையில் 29ம் தேதி முதல் 1ம் தேதி வரையிலான டிக்கெட் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது