முருகன் கோயில் வருஷாபிஷேக விழாவையொட்டி வெகு விமரிசையாக நடந்த மாட்டுவண்டி எல்கை பந்தயம்

*48 ஜோடி மாடுகள் பங்கேற்று அசத்தல்

திருமயம் : திருமயம் அருகே கோயில் வருஷாபிஷேக திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயம் விமரிசையாக நடந்தது. இதில் 48 ஜோடி மாடுகள் பங்கேற்றன.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள முருகாண்டிபட்டி செல்வவிநாயகர், பாலகணபதி, பால தண்டாயுதபாணி கோயில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை 6.30 மணி அளவில் மாட்டுவண்டி எல்லை பந்தயம் நடத்தப்பட்டது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை. தேனி, தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 29 ஜோடி மாட்டுவண்டிகள் பங்கு பெற்றன. பந்தயமானது பெரிய மாடு, நடு மாடு என இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது.

முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் பந்தய தொலைவு போய் வர 9 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 10 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை மதுரை மேலூர் அழகர் கௌஷிக், 2ம் பரிசு நெம்மேலிகாடு ஓம் உடைய அய்யனார், 3ம் பரிசு முருகாண்டிபட்டி கணேசன், 4ம் பரிசு புதுசுக்காம்பட்டி கவின் வசந்த் ஆகியோரின் மாடுகள் வென்றன.

நடு மாடு பிரிவில் 19 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதன் பந்தயத் தொலைவு போய் வர 7 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் பரிசை பரளி செல்வி, 2ம் பரிசு பட்டணம் அகிலேஸ்வரன், 3ம் பரிசு காரைக்குடி கருப்பண்ணன், 4 பரிசு கல்லல் சக்தி, 5ம் பரிசு சேதுராப்பட்டி நவீன் ஆகியோரின் மாடுகள் வென்றன.

இறுதியில் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெற்ற விராச்சலை – லெம்பலக்குடி சாலையில் இருபுறமும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் வந்திருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர். பனையப்பட்டி, நமணசமுத்திரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related posts

விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து பணத்தை தராமல் ஏமாற்றிய இருவர் கைது

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரவீந்திர ஜடேஜா!

புனே அருகே புஷி அணைப்பகுதியில் உள்ள அருவியில் வெள்ளப்பெருக்கு: 2 பேர் உயிரிழப்பு