ஓசியில் மளிகைப்பொருள் கேட்டு கடைக்காரரை சரமாரியாக தாக்கிய மர்ம நபர்கள்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டறை எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகச்சாமி (57). இவர் பட்டறை – அதிகத்தூர் சாலையில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு மது போதையில் வந்த 2 மர்ம நபர்கள் பொருட்களை வாங்கிக் கொண்டு பணம் தர மறுத்துள்ளனர். பணத்தை கொடுக்காமல் பொருள் தரமுடியாது என ஆறுமுகச்சாமி தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர்கள், நாங்கள் யார் தெரியுமா என்று கேட்டு ஆறுமுகச்சாமியை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். அப்போது கடைக்கு வந்தவர்கள் ஆறுமுகச்சாமி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரை சேர்ந்தனர். பலத்த காயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக அவர் தண்டலம் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ஆறுமுகச்சாமியின் மகன் தேன்ராஜ் என்பவர் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். மேலும் ஆறுமுகச்சாமியை தாக்கிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்து 48 மணி நேரமாகியும் குற்றவாளிகளை கைது செய்யாததால் சென்னை நாடார் சங்க நிர்வாகிகள், இந்து வியாபாரிகள் நலச் சங்க நிர்வாகிகள் ஆகியோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!