தமிழகத்தில் காலாவதியான 20 சுங்கச்சாவடிகளை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அகற்ற வேண்டும்: முதல்வருக்கு லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் காலாவதியான 20 சுங்கச்சாவடிகளை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அகற்ற வேண்டும் என்று முதல்வருக்கு லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆர்.முனிரத்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் காலாவதியான 20 சுங்க சாவடிகள் உள்ளன. பஞ்சாப் மாநிலத்தை போன்று தமிழக அரசு சட்ட பேரவையில் திர்மானம் நிறைவேற்றி 26 சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும். மேலும் சென்னைக்கு அருகே உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் நீக்க வேண்டும்.

ஒரு 10 வீல் டிப்பர் லாரிக்கு மாதம் ரூ.70,000, ஒரு வருடத்திற்கு ரூ.8 லட்சம் செலுத்துகிறோம். 12 வீல் டிப்பர் லாரிக்கு மாதத்ம் ரூ.90,000, வருடத்திற்கு ரூ.10 லட்சம் செலுத்துகிறோம். இதனால் சென்னை காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து பொருட்களை சென்னைக்கு எடுத்து வருபவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் தொழிலை பாதுகாக்க விரைவில் சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும். மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அனைத்து சிறிய, பெரிய வாகனத்திற்கு சாலை வரி உயர்த்தப்பட்டது.

அந்த வரியை குறைக்க வேண்டும். மணல் லாரி உரிமையாளர்களுக்கு நேரடியாக மணல் வழங்க வேண்டும். தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகள் மணல் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் நடக்கும் கட்டுமான தொழிலுக்கு ஒரு நாளைக்கு 3000 லோடு மணலும், தமிழகம் முழுவதும் 9000 லோடு மணலும் தேவைப்படுகிறது. இந்த தொழிலை நம்பி சுமார் 75,000 மணல் லாரி உரிமையாளர், ஓட்டுநர் இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் 90 லட்சம் கட்டுமான தொழிலாளர் இருக்கிறார்கள். எனவே நவம்பர் மாதம் மழை காலம் முடிந்த பிறகு அனைத்து மாவட்டங்களிலும் மணல் குவாரிகளை திறக்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

திரவுபதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ₹35 லட்சம் மதிப்புள்ள வீடு மீட்பு அறநிலையதுறை அதிகாரிகள் சீல் வைத்தனர் வேலூர் வேலப்பாடியில் நீதிமன்ற உத்தரவின்பேரில்

வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலையில் சரிவு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில்

ஐஎப்எஸ் நிதிநிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை வேலூரில் நிதி நிறுவன மோசடியால் விரக்தி