நலம் தரும் நவதானியங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

தானியங்கள் பல வகைகளில் இருந்தாலும், அதில் சிறந்தது நவதானியங்களே. நவதானியங்கள் உணவாக மட்டுமில்லாமல் வழிபாட்டுப் பொருளாகவும் பார்க்கப்படுகிறது. நவதானியங்களையும் அதன் பயன்களையும் காண்போம். உடலை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளும். ஒவ்வொரு தானியத்திலும் தனிப்பட்ட சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. மேலும் இவை புரதச் சத்து நிறைந்தவை. நம் முன்னோர்கள் தானியங்களை அதிகளவில் உணவில் பயன்படுத்தியதால் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால் இன்று மாறுபட்ட உணவுமுறைகளால் உடலில் சத்துக்கள் குறைந்து பெயர் தெரியாத நோய்களுக்கு ஆளாகின்றனர்.

நெல்: அரிசியில் 20 மில்லி அளவில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. வைட்டமின் பி, வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. புழுங்கல் அரிசி நீரிழிவு நோய்களில் இருந்து காக்கிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. சீரக சம்பா வாத நோய்களை போக்க வல்லது. சிவப்பு அரிசியில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் உடல் எடை குறைக்க உதவும். அரிசியில் இருந்து தயாரிக்கப்
படும் அவலும் உடலுக்கு நல்லது.

கோதுமை: புரதம், பாஸ்பரஸ், கரோட்டின், இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து, நார்ச்சத்து நிறைந்துள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவு. உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது. கப பிரச்னைகளை தீர்க்கிறது.

துவரை பருப்பு : புரதச்சத்து, வைட்டமின் சி, நார்ச்சத்து, அமினோஅமிலங்கள் நிறைந்துள்ளது. உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. அலர்ஜி வராமல் இருக்கவும்,
உடலில் ஏற்படக்கூடிய காயங்கள், வலிகளை சரி செய்யவும் உதவுகிறது. இதய நோய் பிரச்னைகளை சரி செய்யும், ரத்த சோகையை குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

எள்: கால்சியம், இரும்பு, மெக்னீசியம், வைட்டமின் பி1, வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. உடலில் ரத்தத்தை அதிகரிக்கிறது, ரத்த அழுத்தத்தை சீர் செய்கிறது. தோல் சம்பந்தமான பிரச்னைகளை தீர்க்கிறது. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகளையும் சரி செய்கிறது.

உளுந்தம் பருப்பு: தாது உப்புகள், நார்ச்சத்து, கால்சியம் நிறைந்துள்ளது. உடல் சூட்டை தணிக்கிறது. இடுப்பு வலு பெறவும், இடுப்பு வலியை சரி செய்யவும் பயன்படுகிறது. எலும்பு, தசை, நரம்புகளுக்கு மிகச் சிறந்த தானியம். கருப்பு உளுந்தில் களி செய்து சாப்பிட்டு வர உடலில் எந்தவிதமான நோயும் அண்டாது. தேகத்திற்கும் நல்லது.

பாசிப்பயறு: பாஸ்பரஸ், கால்சியம், கார்போஹைட்ரேட் உள்ளது. நினைவுத்திறன் பாதிப்பு, மலச்சிக்கல், பித்தம், மூலம் போன்ற பிரச்னைகளை சரிசெய்கிறது. கோடைக்காலங்களில் ஏற்படக்கூடிய சின்னம்மை, பெரியம்மை தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. கொண்டைக்கடலை: கால்சியம், இரும்புச்சத்து, புரோட்டீன், நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கிளைசமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. மார்பகப் புற்றுநோய் வருவதை தடுக்கிறது. ரத்த சோகையை நீக்கி உடலை உறுதியாக்கும்.

மொச்சை: மினரல், நார்ச்சத்து, பொட்டாசியம், போலேட் நிறைந்துள்ளது. ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி அணுக்கள், திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. புற்றுநோய் வராமல் காக்கிறது. குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமான பிரச்னையை சரி செய்கிறது.

கொள்ளு : தாது உப்புகள், பாஸ்பரஸ், மினரல், இரும்புச்சத்து, மாவுச்சத்துகள் நிறைந்துள்ளது. கெட்ட நீரை வெளியேற்ற உதவுகிறது. சிறுநீரக கற்களை கரைக்கிறது. சர்க்கரை நோய்களை சரி செய்கிறது.

தொகுப்பு: பிரியா மோகன்

Related posts

அதிகரிக்கும் லேட் நைட் உணவுகள்… காத்திருக்கும் ஆபத்துகள்!

வாய் துர்நாற்றத்தை போக்க எளிய வழிகள்!

வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் காக்க!