ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு: மருத்துவர்கள் தகவல்

சென்னை: சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவமனைகள் உயர்தர சிகிச்சையில் சிறந்து விளங்கி வருகிறது. மேலும், ஆபரேஷன், சிகிச்சை மற்றும் பல்வேறு மருத்துவ செயல்பாடுகள் மூலம் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 41 வெளிநாட்டு நோயாளிகள், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதன் மூலம் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் வெளிநாட்டு நோயாளிகள் சிகிச்சை பெரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக வங்கதேசத்தில் இருந்து 26 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும், இலங்கையில் இருந்து 2 நோயாளிகளும், நைஜீரியா உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து 14 நோயாளிகள் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். குறிப்பாக வங்கதேசத்தை சேர்ந்த 67 வயது கொண்ட அப்துல் மாலிக் என்ற நபருக்கு, கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நெஞ்சு வலி இருந்து வந்தது. அந்நாட்டில் இதற்கான பரிசோதனைகளும், சிகிச்சைகளும் போதுமான அளவு இல்லை என்பதால் இதயத்தில் என்ன பிரச்னை என்பதை கண்டறிய முடியவில்லை.

இதனால் கடந்த வாரம் சிகிச்சைக்காக மருத்துவ சுற்றுலா என்ற விசா பெற்று இந்தியா வந்துள்ளார். இந்தியாவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக சென்ற போது இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதற்கு 10 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இங்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் ரத்தநாள அடைப்புகள் நீக்கப்பட்டு ஸ்டண்ட் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.

6 நாட்கள் சிகிச்சையில் இருந்த நோயாளி சில தினங்களுக்கு முன் நலமுடன் குணமடைந்து வீடு திரும்பினார். இந்த சிகிச்சை தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ள 10 லட்சம் கேட்கப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு தேவையான மருந்து மாத்திரைகள் உட்பட 96 ஆயிரம் மட்டுமே கட்டணமாக பெறப்பட்டுள்ளது.தரமான சிகிச்சை குறைவான செலவில் வழங்குவதால் தான் தமிழகத்தை தேடி வெளிநாட்டு நோயாளிகள் வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பெரிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த 10 ஏக்கர் நிலம் தேர்வு: பயணிகள் நலன் கருதி நடவடிக்கை

ஜெயா கலை, அறிவியல் கல்லூரியில் ஓணம் கோலப் போட்டிகள்

குடியிருப்புக்கு நடுவில் உள்ள மதுபானக் கடையால் மக்கள் அவதி: வேறு இடத்தில் மாற்ற கலெக்டரிடம் மனு