என்.எஸ்.எஸ் மாணவர் பேரியக்கமும் செயல்பாடுகளும்!

நாட்டு நலப்பணித்திட்டம் என்னும் சீர்மிகு செயல் திட்டம் இன்று பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் செவ்வனே சிறப்புடன் செயலாற்றிவருகிறது. நாட்டு நலப்பணித் திட்டம் (National Service Scheme) என்பது இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தினால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். என்.எஸ்.எஸ் என்கிற மூன்றெழுத்து மந்திரச்சொல் இந்தியா முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் காலத்திலேயே இந்திய மாணவர்களை நாட்டு நலப்பணிகளில் ஈடுபட வைக்கும் எண்ணம் துளிர் விட்டது. அண்ணல் காந்தியடிகள் தமது ஆதரவாளர்களிடம் வலியுறுத்தும் முக்கிய கருத்து என்னவென்றால் நமது சமுதாயக் கடமைகளை எப்போதும் நம் கடமையாகக் கொள்ள வேண்டும் என்பதே.

மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலங்களில் தன் மனம் போன போக்கில் செயல்படாமல் சமூக சேவைகளில் ஈடுபடத் தங்களைத் தயார்படுத்தும் காலங்களாக நினைத்துச் செயல்பட வேண்டும். மாணவர்கள் தம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தினருடன் ஒரு நெருங்கிய தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சமூக, பொருளாதார பலவீனங்கள் குறித்து மாணவர்கள் ஆய்வு மேற்கொள்ளத் தூண்டப்பட வேண்டும். பலவீனங்களை கண்டறிவதுடன் அதனைத் தீர்ப்பதற்கான காரணங்கள், தீர்வுகள், வழிமுறைகள் காணப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இத்தகைய அடிப்படை நோக்கங்களைக் கருத்தில் கொண்டு 1969ல் செப்டம்பர் 24 அன்று தொடங்கப்பட்டது தான் நாட்டு நலப்பணித் திட்டம் என்கின்ற பயிற்சிக்களம். இதன் ஒரு பிரிவு பொதுவாக 20 முதல் 40 மாணவர்கள் வரை உள்ளடக்கி இருக்கும். இந்த மாணவப் பேரியக்கம் தொடங்கி 55ஆம் ஆண்டு மலர்ந்து மணம் பரப்பி வருகிறது.

விடுதலைக்குப் பின் பல்வேறு பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் பரிந்துரையின்படி 1969ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 24ஆம் நாள் என். எஸ்.எஸ் எனப்படும் அமைப்பு முதன் முதலாகக் கல்லூரிகளில் தொடங்கப்பட்டது. 1969ஆம் ஆண்டிற்கான மற்றொரு சிறப்பு அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் நூற்றாண்டு. பரவலாக மாணவர்களிடையே ஏற்பட்ட ஆர்வமும் ஈடுபாடும் என்.எஸ்.எஸ்-யினை அடுத்த கட்ட நகர்வை நோக்கிக் கொண்டு சென்றது. ஆம்,1980ல் இந்தியா முழுவதும் மேல்
நிலைப் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. அதனால்தான் இன்று இந்தியாவிலேயே மிகப்பெரிய,மிக அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களை, மாணவர்களைக் கொண்ட மாபெரும் மாணவர் படையாகத் திகழ்கிறது. அதிகமான மாணவ மாணவியர் எண்ணிக்கை கொண்டுள்ளதால் அளவிடற்கரிய, செயற்கரிய அரும்பெரும் சாதனைகளையும் ஆற்றி வருகிறது .

இன்றைய நவீன சூழலில் கல்வி கற்பது என்பது எங்கிருந்தும் கற்றுக் கொள்ள முடியும். எவ்வகையிலும் அறிவை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் நற்சிந்தனைகளை, நல்ல பண்புகளை, நல் நடத்தையை, நல்ல பழக்க வழக்கங்களை, நல்லொழுக்கத்தை இது போன்ற பள்ளி, கல்லூரி சார்ந்த இணைச் செயல்பாடுகள் மூலம் மட்டுமே மாணவச் சமுதாயம் பெற முடியும்.

‘‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா” என்கின்ற முதுமொழிக் கேற்ப இளம் வயதிலேயே சமூக சேவை செய்ய வேண்டும். உடல் உழைப்பினை சமூக மேம்பாட்டிற்கு ஆற்ற வேண்டும் என்கிற நல்லெண்ணம் பசுமரத்தாணி போல் பதிந்திட இத்தகைய அமைப்புகள் ஒவ்வொரு கல்வி நிறுவனங்களின் கட்டாயத் தேவை ஆகிறது.

பதின்ம வயதில் தடுமாற்றங்கள், அலைக்கழிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இவை மட்டுமின்றி ஊடகங்கள், கைப்பேசிகள், திரைப்பட நடிகர்கள் மீதுள்ள ஈர்ப்பு என ஏராளமான அம்சங்கள் மாணவர்களின் எண்ணத்தினை மடைமாற்றிடச் செய்வதை, நல்வழிப் பாதையில் திருப்பவும், இளைஞர்களின் அளவிடற்கரிய ஆற்றலை ஆக்கசக்தியாக மாற்றிடவும், சமூகச் சிக்கல்களைத் தீர்க்கவும், சமூக அவலங்களை தட்டிக் கேட்கவும், புரட்சி எண்ணங்களை ஏற்படுத்திடவும், சமூகப் பிரச்னைகளைத் தெரிந்து கொள்ளவும், சமூக நிலைமையினைப் புரிந்துகொள்ளவும் கல்வி நிறுவனங்கள் தாண்டி இத்தகைய அமைப்புகளில் பயிற்சி பெறுவது இன்றியமையாதது என்பதை நாம் என்.எஸ்.எஸ்-ன் செயல்பாடுகள் மூலம் தெள்ளத்தெளிவாக அறிந்து கொள்கிறோம்.

குறிப்பாக நாட்டு நலப் பணித்திட்டத்தில் தொடர்பணி செயல்பாடுகள், சிறப்பு முகாம் செயல்பாடுகள் என இருவகையாகப் பகுக்கப்படுகிறது. தொடர்பணி செயல்பாடுகள் பள்ளி அல்லது கல்லூரி வளாகத் தூய்மை, போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிகள், விழாக்கால நெரிசல்களை கட்டுப்படுத்துதல், மரக்கன்றுகள் நடுதல், விழிப்புணர்வுப் பேரணிகள், இயற்கை இடர்ப்பாடுகளின்போது துயர் துடைப்பு பணிகள் மேற்கொள்ளுதல், மத்திய- மாநில அரசுகளின் சமூக நலத்திட்டங்களைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தல், மருத்துவ முகாம்கள், ரத்ததான முகாம்கள் எனப் பல்வேறு பணிகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம் .

சிறப்பு முகாம் செயல்பாடுகளில் அருகில் உள்ள கிராமத்தினைத் தத்து எடுத்துக்கொண்டு ஒரு வார காலம் கிராமத்திலேயே தங்கியிருந்து தினந்தோறும் காலை வேளைகளில் உடல் உழைப்புப் பணிகள், மாலை நேரங்களில் விழிப்புணர்வு கருத்தரங்குகள் எனத் திட்டமிட்டு ஒட்டுமொத்த கிராம வளர்ச்சிக்கு உறுதுணையாகச் செயல்பாடுகள் நடைபெறுகின்றன.

மதிப்பு இல்லாத மதிப்பெண்களை நம்பி ஓடும் இக்காலக் கல்விச்சூழ்நிலையில் என்.எஸ்.எஸ் போன்ற கல்வி இணை செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவர்கள் வருங்காலங்களில் வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றனர். எல்லாவிதமான சவால்களையும் இடையூறுகளையும் பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் ஆற்றல் மிக்கவர்களாகத் திகழ்கின்றனர்.

என்.எஸ்.எஸ் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் உயர்கல்வி வாய்ப்புகளுக்கும் வேலை பெறுவதற்கும் உறுதுணையாக இருக்கின்றன. கூடிவாழும் மனப்பான்மை, விட்டுக்கொடுக்கும் எண்ணம்,முடிவெடுக்கும் திறன், மாற்றுக் கருத்துகளையும் ஏற்கும் ஜனநாயகத் தன்மை,நேர மேலாண்மை , பன்முகத் திறமைகளை பெறுதல், தலைமைப் பண்பு என, பல்வேறு நற்பண்புகளை என்.எஸ்.எஸ் செயல்பாடுகளில் ஈடுபடும்பொழுது மாணவர்கள் பெறுகின்றனர். எனவே, பொதுநலம் சார்ந்த முன்னெடுப்புகள் சுருங்கி வரும் சூழ்நிலையில் சமூகத்திற்குப் பயனளிக்கும் வண்ணம் வாழும் முறைமைகள் அருகி வரும் நிலையில் கல்வி நிறுவனங்களில் நடைபெறுகின்ற இத்தகைய தொண்டு நிறுவன அமைப்புகள், சமூக சேவை இயக்கங்கள்தான் சமூக ஆர்வலர்களுக்கு மன ஆறுதலைத் தரும் மாமருந்தாக உள்ளது. சமுதாய மேம்பாட்டிற்கு அயராது உழைத்திடும் மாணவத் தொண்டர்களின் பணி சிறக்கட்டும். நாட்டு நலப்பணித்திட்டம் பல நூற்றாண்டுகள் வெற்றி நடை போடட்டும்.

பிரச்னைகளைக் கண்டறிந்து தீர்வு காணும் தன்மை,
முடிவெடுக்கும் திறன், மாற்றுக் கருத்துகளையும் ஏற்கும்
ஜனநாயகத் தன்மை, நேர மேலாண்மை, பன்முகத்
திறமைகளைப் பெறுதல், போன்ற நற்பண்புகளை
என்.எஸ்.எஸ்-ல் உள்ள மாணவர்கள் பெறுகின்றனர்.

Related posts

அஜின்கியா ரஹானேவின் சாதனையை முறியடிப்பாரா யஷஸ்வி ஜெய்ஸ்வால்: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

பராமரிப்பு பணி காரணமாக ஈரோடு-திண்டுக்கல் வரை பகுதியாக ரயில்கள் ரத்து..!!

என் அம்மா உயிருடன் இருந்தவரை என் பிறந்தநாளுக்கு அவரிடம் ஆசி பெறுவேன் : பிரதமர் மோடி