ஓட்டுக்காக தயங்கும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி அரசு சந்திர பிரியங்கா பதவி பறிப்பா? ராஜினாமாவா?: ஒரு வாரமாகியும் அரசாணை வெளியிடாத மர்மம் என்ன மவுனம் கலைப்பாரா முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தனித்தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர் சந்திர பிரியங்கா (34). முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தேஜ கூட்டணி அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றி வந்தார். இவருக்கு குடும்பத்தில் சில பிரச்னைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக முதல்வர் ரங்கசாமிக்கு புகார்கள் சென்றது. சந்திர பிரியங்காவின் தந்தையும் முன்னாள் அமைச்சருமான மறைந்த சந்திரகாசுவும் ரங்கசாமியும் நெருங்கிய நண்பர்கள். இதனால் சந்திர பிரியங்காவை நேரில் அழைத்து முதல்வர் ரங்கசாமி கண்டித்து அறிவுரை கூறி அனுப்பி உள்ளார்.

இருப்பினும் சந்திரபிரியங்கா மீது தொடர்ந்து புகார்கள் வந்ததால், கடந்த 9ம் தேதி துணைநிலை ஆளுநரை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்காவை திடீரென டிஸ்மிஸ் செய்து, காரைக்கால் வடக்கு தொகுதியின் எம்.எல்.ஏ திருமுருகனை அமைச்சர் பதவியில் நியமிக்க பரிந்துரை கடிதம் கொடுத்தார். இந்த கடிதம் ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு, மீண்டும் புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. சந்திர பிரியங்கா ஆளுநர் தமிழிசையிடம் நெருங்கிய நட்பு வைத்திருந்ததால் பதவி பறிப்பு விவகாரம் அறிந்து கடந்த 11ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநர் மற்றும் முதல்வருக்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார். தனது ராஜினாமா தொடர்பாக தொகுதி மக்களுக்கு சந்திர பிரியங்கா எழுதிய உருக்கமான கடிதத்தில், ‘சாதி மற்றும் பாலின ரீதியிலான தாக்குதலுக்கு உள்ளானதாகவும், தன்னை சுற்றி சதி வலை பின்னப்படுகிறது. அதிகார பலம், ஆணாதிக்க சக்திகளை எதிர்த்து இனிமேலும் போராட முடியாது என்ற காரணத்தால் ராஜினாமா செய்கிறேன்’ என கூறியிருந்தார். சந்திர பிரியங்காவின் இந்த குற்றச்சாட்டு புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் சந்திரபிரியங்காவின் செயல்பாடுகள் சரியில்லாத காரணத்தால்தான் அவரது பதவியை முதல்வர் பறித்ததாக என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை, ‘அமைச்சர் சந்திர பிரியங்காவின் செயல்பாடுகள் மீது கடந்த 6 மாதகாலமாக முதல்வர் அதிருப்தியில் இருந்தார். தற்போதுதான் அவரை நீக்கம் செய்து கடிதம் கொடுத்துள்ளார். இதனை நானும் ஏற்றுக் கொண்டேன்’ என்று தெரிவித்து உள்ளார். இதன்மூலம் பெண் அமைச்சர் சந்திரபிரியங்காவை பதவியில் இருந்து முதல்வர் டிஸ்மிஸ் செய்திருப்பது வெட்ட வெளிச்சமானது. ஆனால், சந்திரபிரியங்காவின் குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளதால் புதுச்சேரி அரசியல் ஆட்டம் கண்டு உள்ளது. சந்திர பிரியங்காவின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் இதுவரை வாய் திறக்கவில்லை. இதுகுறித்து பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, `முதல்வருக்கும், ஆளுநருக்கும் நடந்த உரையாடல்கள், முதல்வர் கொடுத்த கடிதம் போன்றவற்றை ஆளுநர் தமிழிசை வெளியில் சொல்வது ரகசிய காப்பு பிரமாணம் எடுத்துக் கொண்டதற்கு எதிரானது, முரண்பாடானது.

முதல்வர் அனுப்பிய கோப்பை டெல்லிக்கு அனுப்பி, ஒப்புதல் வந்த பிறகு அது தொடர்பான அறிவிப்பை மட்டுமே மாநில அரசிதழில் வெளியிட வேண்டும். அது தொடர்பாக பேட்டி அளிப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ரகசிய காப்பு பிரமாணத்துக்கு எதிரானது. ஆகவே தார்மீக பொறுப்பேற்று தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், சந்திர பிரியங்கா ராஜினாமா செய்யும் முன்பே, முதல்வர் அவரை பதவிநீக்கம் செய்து விட்டார் என்று கூறுகிறார். ஆனால், அது தொடர்பாக முதல்வர் இதுவரை வாய் திறக்கவில்லை. சந்திர பிரியங்காவின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டதா? அல்லது அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டதா என்பது மர்மமாகவே உள்ளது.

நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். சந்திர பிரியங்கா அமைச்சரவை மீது பகிரங்கமான குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதில் முதல்வர் ரங்கசாமிதான் முதல் குற்றவாளி. மத்திய பட்டியலின சமுதாயத்தின் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் ரங்கசாமி மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார். கோவையில் கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியில் சந்திர பிரியங்காவை பாராட்டி பேசிய ஆளுநர் தமிழிசை, தற்போது முதல்வர் ரங்கசாமி சொல்வதை ஏற்றுகொள்வதாக கூறி சர்ச்சையில் சிக்கி உள்ளார். இதுதொடர்பாக சந்திர பிரியங்கா தரப்பில் வெளியிட்டுள்ள பதிவில், ‘முதல்வரே தன்னுடைய கோப்புக்கு கவர்னர் மாளிகை ஒப்புதல் தரவில்லையென பொதுவெளியில் கூறும்போது, அமைச்சர் மட்டும் சிறப்பாக செயல்படவில்லை என்று கூறுவது எந்தவிதத்தில் நியாயம். பெண் அமைச்சரை புகழ்ந்து பேசிவிட்டு, அவர் என்னை அடிக்கடி சந்திப்பதில்லை என துணை நிலை ஆளுநர் தமிழிசை கூறியிருப்பது சுத்தமான பொய். அவருக்கு ஞாபக மறதி ஏற்பட்டுள்ளது’ என்று பதிலடி தந்து உள்ளார். ஒரு அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டாலோ அல்லது ராஜினாமா ஏற்கப்பட்டாலோ ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிடப்படும். ஆனால், ஒரு வாரத்துக்கும் மேலாகியும் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதா? ராஜினாமாவா? என்று புதுவை அரசு சார்பில் வெளிப்படையாக சொல்லவில்லை.

புதுச்சேரியில் வன்னியர் மற்றும் தலித் சமூக வாக்குகள் அதிகம். சந்திர பிரியங்கா தலித் சமூகம் என்பதால், தற்போது பதவியை பறித்தால் நாடாளுமன்ற தேர்தலில் இதன் பாதிப்பு எதிரொலிக்கும் என்று முதல்வர் ரங்கசாமி கருதுகிறார். இதனால்தான் சந்திர பிரியங்கா அமைச்சர் பதவி பறிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தயங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் சந்திர பிரியங்காவை அமைச்சராகவே தொடர முதல்வர் ரங்கசாமி மீண்டும் பரிந்துரை செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக புதிய அமைச்சரை அறிவிப்பதிலும் காலம் கடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது. காலதாமதம் குறித்து சந்திர பிரியங்கா ஆதரவாளர்களிடம் கேட்டபோது, ‘அமைச்சர் விவகாரத்தில் ரங்கசாமிக்குதான் பின் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் பதவியை உடனே பறிக்க ஒன்றிய அரசு தயக்கம் காட்டுகிறது. தலித் மற்றும் பெண் அமைச்சர் என்பதாலும், பாஜவுடன் இணக்கமாக இருப்பதாலும் எங்களுக்கே சாதகமான முடிவு வரும்’ என்றனர். ராஜினாமா கடிதத்தை வழங்கிய சந்திர பிரியங்கா, புதுவை கடற்கரை சாலையை ஒட்டியுள்ள அரசு வீடும், கார்களும் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை. அந்த வீட்டுக்கு போலீசாரின் பாதுகாப்பும் தொடர்கிறது. பதவியை பறிக்க ஆளுநரிடம் முதல்வர் ரங்கசாமி கடிதம் வழங்கியதாக கூறும் நிலையில், தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் அலுவலகத்தில் அவரது பெயர் பலகை மாற்றப்படவில்லை.

அமைச்சருக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் அவருக்கு தொடர்வதால் சந்திர பிரியங்கா ராஜினாமா செய்தாரா? அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்டாரா? என்ற குழப்பம் பொதுமக்களிடையே எழும்பியுள்ளது. தற்போது தெலங்கானாவில் கவர்னர் தமிழிசை உள்ளதால் அவர் புதுச்சேரி வரும்போது, சந்திர பிரியங்கா ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதா? அல்லது முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரையின் பேரில் அவரது பதவி பறிக்கப்பட்டதா என்ற முழு விவரம் தெரியவரும்.

* பெண் அமைச்சரை புகழ்ந்து பேசிவிட்டு, அவர் என்னை அடிக்கடி சந்திப்பதில்லை என துணை நிலை ஆளுநர் தமிழிசை கூறியிருப்பது சுத்தமான பொய். அவருக்கு ஞாபக மறதி ஏற்பட்டுள்ளது.

* சந்திர பிரியங்கா, புதுவை கடற்கரை சாலையை ஒட்டியுள்ள அரசு வீடும், கார்களும் ஒப்படைக்கப்படவில்லை. அந்த வீட்டுக்கு போலீசாரின் பாதுகாப்பும் தொடர்கிறது. தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் அலுவலகத்தில் அவரது பெயர் பலகையும் மாற்றப்படவில்லை.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது