நவம்பர் 14- குழந்தைகள் தினக் கொண்டாட்டம்

குழந்தைகளின் உரிமைகள், கல்வி மற்றும் நலன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 அன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. நேரு குழந்தைகளை அதிகமாக நேசித்தார். இந்நாளில், குழந்தைகளுக்கான கல்வி மற்றும் ஊக்கமளிக்கும் பல நிகழ்ச்சிகள் இந்தியா முழுவதும் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் உள்ள சில பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தன்று விடுமுறை அளிக்கின்றன. அதே நேரத்தில் தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்காகக் கண்காட்சியை நடத்துகின்றன. 1951ம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் சமூக நலத்துறை உறுப்பினரான VM குல்கர்னி, இங்கிலாந்தில் சிறார் குற்றவாளிகளின் மறுவாழ்வு குறித்த ஆய்வை மேற்கொண்டபோது, ​​இந்தியாவின் பின்தங்கிய குழந்தைகளைக் கவனிக்க எந்த அமைப்பும் இல்லை, என்பதை உணர்ந்தார்.

இங்கிலாந்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பிறந்தநாளில் “சேவ் தி சைல்ட் ஃபண்ட் ” நிதி திரட்டுவதற்காகக் கொண்டாடப்பட்ட கொடி தினத்தால் ஈர்க்கப்பட்ட குல்கர்னி, பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை குழந்தைகள் நலனுக்காக உழைக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி சேகரிப்பதற்காக கொடி நாளாகக் கொண்டாடலாம் என்று பரிந்துரை செய்தார். 1954ம் ஆண்டுதான் அந்த நாள் முதன்முதலில் “குழந்தைகள் தினமாக” கொண்டாடப்பட்டது. 50,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் டெல்லியில் உள்ள தேசிய மைதானத்தில் நடந்த கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர். 1957ம் ஆண்டு, நவம்பர் 14 ம் தேதி இந்தியாவில் குழந்தைகள் தினமாக அதிகாரப்பூர்வமாக ஒரு சிறப்பு அரசாணை மூலம் அறிவிக்கப்பட்டது. இந்திய அரசின் அஞ்சல் மற்றும் தந்தித் துறை பால் திவாஸ் (“குழந்தைகள் தினம்”) அன்று முதல் நாள் அஞ்சல் அட்டைகளையும் மூன்று நினைவுத் தபால் தலைகளையும் வெளியிட்டது.

Related posts

காற்று மாசுபாட்டினால் பறிபோகும் உயிர்கள்

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: கரூரில் முன்னாள் அமைச்சர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்