Sunday, June 30, 2024
Home » நோவாவில் இடம்பிடித்த யோகா பயிற்சியாளர்கள்!

நோவாவில் இடம்பிடித்த யோகா பயிற்சியாளர்கள்!

by Porselvi

இன்றைய லைஃப் ஸ்டைல் மாற்றத்தினாலும், உணவுப் பழக்கமுறை மாற்றத்தினாலும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வரக் கூடிய நோய்கள் அனைத்தும் இன்று மிகக் குறைந்த வயதான 35 வயதிலேயே வந்துவிடுகிறது. இதனை தவிர்க்க, உணவு கட்டுப்பாடுகள் மிக அவசியம் என்றாலும், அது மட்டும் போதாது, உடற்பயிற்சியினையும் செய்தால் மட்டுமே முழுப் பலன் கிட்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.இருந்தபோதிலும், உணவு கட்டுப்பாட்டையாவது நாம் இழுத்துப் பிடித்து செய்துவிடலாம். ஆனால், உடற்பயிற்சி செய்வது என்பது மிக கடினமான ஒன்று. நமது பிஸியான வேலைகளுக்கு மத்தியில் காலையிலோ அல்லது மாலைநேரங்களிலோ உடற்பயிற்சிக்கென்று தனியாக நேரத்தை ஒதுக்கி, உடற்பயிற்சிக் கூடத்திற்கு சென்று வருவதெல்லாம் சற்று கடினமான ஒன்றுதான். உடற்பயிற்சிக்கு இணையான ஏன்.. அதற்கும் மேலான ஒரு பயிற்சி இருக்கிறது. அதுதான் “யோகா பயிற்சி’’. உடற் பயிற்சி செய்வதற்கு உடம்பில் வலுவேண்டும். அதற்காக, உடற்பயிற்சியினை குறைத்து மதிப்பீடு செய்யவில்லை, செய்யவும் கூடாது. அதே சமயத்தில், உடற்பயிற்சி செய்தால் உடல் மட்டும்தான் திறம் படும். யோகா பயிற்சி செய்வதால் உடலும், மனமும் உறுதியாகும்
.
இதனை மையப்படுத்தியும், குழந்தைகளுக்கு நடக்கும் வன்கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், லலிதா, வந்தனா, திவ்யபாரதி, சக்தி ஜெய்கணேஷ் ஆகிய நான்கு பெண்கள் “வீரபத்ராசனம்” (போர்வீரர் போஸ்) என்னும் யோகாசனத்தை ஏழு நிமிடம் இடை விடாமல் செய்தும், கண்தானம் செய்யும் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும், 4 வயது முதல் 14 வயது வரை உள்ள 25 குழந்தைகள், தங்களின் கண்களைக் கட்டிக் கொண்டு, “ஜானு சீராசனம்” என்னும் யோகாசனத்தை இடைவிடாமல், 30 நிமிடம் செய்தும், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சின்மய வித்யாலயா பள்ளியில் படிக்கும் 8 வயது மாணவி தினேஷிகா, “பூரண சலபாசனம்’’ என்னும் கடுமையான ஆசனத்தை இடைவிடாமல் 8 நிமிடம் வரை செய்து, தனிநபராக சாதனை படைத்திருக்கிறார்.இந்த விழிப்புணர்வு சாதனை நிகழ்ச்சியில், சாய் யோகாசன மையத்துடன் இணைந்து, நோவா உலக சாதனை இயக்கம் பங்கு கொண்டு, இவைகளை பதிவு செய்து, தனது உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்திருக்கிறது.

“வீரபத்ராசனம்’’ செய்த திவ்யபாரதி கூறியதாவது; இந்த ஆசனம் செய்வதற்கு ஏறக்குறைய ஒரு மாதகாலமாக நாங்கள் பிராக்டிஸ் செய்து வந்தோம். ஏழு நிமிடம் வீரபத்ராசனம் செய்வதற்கு, முதலில் அதற்கான பயிற்சியினை இரண்டு நிமிடம் செய்யத் தொடங்கினோம். அது செய்யவே மிகவும் கடுமையாக இருந்தது. கைகள் இரண்டும் வலி எடுக்கும். ஆனால், அதை எல்லாம் பெரிதுபடுத்தாமல், நோவா உலக சாதனையில் நம் பெயர்களும் இடம் பெற வேண்டும் என்கின்ற ஒரே குறிக்கோளுடன், நாங்கள் பயிற்சியினை மேற்கொண்டோம். இரண்டு, மூன்றானது. மூன்று, நான்கானது. நான்கு, ஐந்து, ஆறு என படிப்படியாக வீரபத்ராசனம் செய்யும் பயிற்சி நேரத்தை உயர்த்தி, கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டோம். எங்களால், வீரபத்ராசனம் செய்ய முடியுமா முடியாதானு தோணும் சமயத்துல, உங்களால நிச்சயம் முடியும்னு சொல்லி என்கரேஜ் பண்ணுவாங்க எங்க கோச் பூர்ணிமா. அவங்களாலதான் நாங்க இந்த சாதனையை செய்ய முடிஞ்சது.

ஒரு குடும்பப் பெண்ணான எனக்கு, வீட்டுலையும் வேலை இருக்கும். இந்த மாதிரி சாதனைகளெல்லாம் செய்யும் போது, வீட்டு வேலைகள் சற்று தடைப்படும். அதை புரிஞ்சிகிட்டு, என் கணவரும், குடும்பத்தாரும், வீரபத்ராசனம் செய்ய பயிற்சிக்கு அனுப்புவாங்க. அவங்களுக்கு ஒரு பெரிய தேங்க்ஸ்.அதுபோக, வீரபத்ராசனம் நாங்க செய்ய ஆரம்பித்த மூணு நிமிஷத்துலேயே, இதனை மேலும் செய்ய முடியுமா.. முடியாதானு ஒரு டைலமா வரும் சமயத்துல, அங்க சுத்தி நின்னுட்டு இருந்த ஆடியன்ஸ், கைதட்டி உற்சாகம் தரும்போது, வலிகளையெல்லாம் மறந்து வீரபத்ராசனம் எங்களால செய்து சாதனை படைக்க முடிஞ்சது. அவங்களுக்கும் இந்த நேரத்துல நன்றி.

இந்த சாதனைகள் எல்லாம் தாண்டி, யோகா செய்வதன் மூலமாக நமக்குள் இருக்கும் பல நோய்களை விரட்டலாம். கூடவே, அன்றாடம் நமது உடலில் இருக்கும் சோம்பலையும், ஒருவித அசதியையும் அண்டவிடாமல் பாதுகாக்கலாம். நான் யோகாசனங்கள் செய்ய ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை, சளிக்கு மாத்திரைகளை எடுத்துக் கொண்டதே இல்லை. யோகாசனம் மூலம், மூச்சுச் பயிற்சியினால் அதனை ஒரே நாளில் குணமாக்கிவிடுவேன். அதே போல், எனக்கு யோகா தெரியாமல் இருந்த சமயத்தில், ஒரே ஒரு மாடிப்படி ஏறுவதற்கே சோம்பலாக இருக்கும். மூட்டு வலியெடுக்கும். இப்போது அந்த பிரச்னைகள் இல்லை. நிச்சயம் அனைவரும் யோகாசனத்தில் ஈடுப்படுங்கள். என்று கேட்டுக் கொண்டார்.

பூரண சலபாசனம் செய்த சிறுமி தினேஷிகா கூறும்போது; பூரண சலபாசனத்தை தொடர்ந்து 8 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும். கடைசி இரண்டு நிமிடம் என்னால செய்ய முடியுமா? என்கின்ற கேள்வியை என் மனதிற்குள் கேட்டுக்கிட்டே இருந்தேன். கடைசி ஒரு நிமிஷம் என்னால செய்யவே முடியலை. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஆனால், எங்கம்மா எனக்கு கொடுத்த பிராக்டீசை நினைச்சி பார்த்தேன். அதுபடியே பொறுமையா, நிதானமா பூரண சலபாசனம் செய்தேன். இப்போ உங்க முன்னாடி சாதனை படைத்த தினேஷிகாவா இருக்கேன். எங்கம்மா வேற யாருமில்லை; யோகா பயிற்சியாளர் பூர்ணிமாதான். இன்னும், இன்டர்நேஷனல் லெவல்ல, சிர்சாசனா, சலபாசனா, ஹாண்ட் பேலன்ஸ், லெக் பேலன்ஸ் போன்ற ஆசனங்களைச் செய்து, முதல் பரிசு பெறவேண்டும் என்று தன்னுடைய ஆசையினை வெளிப்படுத்தினார்.

மேலும், அவந்திகா என்னும் குழந்தை, அவர் தனது ஆறு வயதில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால், தன் நடையை இழந்தார். தொடர்ந்து பிசியோதெரபி மற்றும் பேச்சுத்திறன் சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். தற்போது அவந்திகா, தன்னை மேம்படுத்திக் கொள்ள, யோகாவில் சேர்ந்தார். நான்கு மாத பயிற்சியின் மூலம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார். இந்த நிகழ்வுகளில் அவந்திகாவும் ஜானு சீராசனம் செய்தார். இதனைக் கண்ட, அனைவரும் நெகிழ்ந்து போனார்கள். இந்த நிகழ்ச்சியில், பிரபல பல் மருத்துவர்கள் டாக்டர்.சி.நந்தகுமார், டாக்டர். அட்சயா மற்றும் அக்யூ ஹீலர் நந்தினி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை, நோவா குழுவின் தேசிய தூதர் திலீபன் இளங்கோவன், தீர்ப்பாளர்கள் நவீன் ராஜ் ஆகியோர் ஆய்வு செய்தும், உலக சாதனையாக அங்கீகரித்தும், அதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.இவர்களின் சாதனைகளுக்கு உறுதுணையாக இருந்த, சாய் யோகாசனம் மையத்தின் நிறுவனர் மற்றும் யோகா பயிற்சியாளர், திருமதி. பூர்ணி தினேஷுக்கு, சமூக வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
– ரா.ரெங்கராஜன்

You may also like

Leave a Comment

three + 20 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi