கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவுப்பொருள் விற்பனை செய்த கடைகளுக்கு நோட்டீஸ்: உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை

அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில், சுகாதாரமற்ற முறையில் உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை தொடர்ந்து, உணவு பாதுகாப்புத்துறையினர் அங்கு ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களை எச்சரித்து நோட்டீஸ் வழங்கினர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள டீ கடைகளில், சுகாதாரமற்ற முறையில் போண்டா, வடை, பஜ்ஜி ஆகிய உணவுப் பொருட்கள் விற்கப்படுகின்றன. இவற்றை வாங்கி சாப்பிடுவதால், பயணிகள் மற்றும் குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக குற்றசாட்டு எழுந்தது. இதுகுறித்து, கடந்த 8ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

அதன்பேரில், சென்னை மாவட்ட நியமன உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சதீஷ்குமார் உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சுந்தரமூர்த்தி தலைமையில், அதிகாரிகள் நேற்று முன்தினம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள டீ கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது திறந்தவெளியில் பஜ்ஜி, வடை, போண்டா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர்களை எச்சரித்து, திறந்தவெளியில் உணவுப் பொருட்களை விற்பனை செய்யகூடாது. அவற்றை மூடி வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கப்பட்டது. நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் திறந்தவெளியில் போண்டா, பஜ்ஜி, வடை விற்பனை செய்ததால் அபராதம் விதித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மீண்டும் உணவு பாதுகாப்புத்துறையினர் எச்சரித்தனர்.

Related posts

தூத்துக்குடியில் பிரபல வணிக வளாகத்தில் இயங்கி வரும் கே.எஃப்.சி. உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து

நொய்டாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்க உள்ள கியர் ஸ்டாமர்க்கு பிரதமர் மோடி வாழ்த்து!!